Friday, October 31, 2008

சிறுகதை - ஆளில்லாத தீவினிலே..... இறுதிப்பகுதி!

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

வீடியோ கான்பரன்ஸில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மேலதிகாரிகளுக்கும் முன் அமர்ந்து இருந்தேன். என் அருகில் கேப்டன் சான்சஸ் இருந்தார். சான்சஸின் முகம் வியர்வையில் குளித்து இருந்தாலும், அவருக்குள் இருக்கும் பதற்றத்தை அவரால் தவிர்க்க இயலாதது தெரிந்தது. அதிகாரிகள் கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தனர்.

“தமிழ்! நீங்க சொல்வது உண்மையாயா?”

“கண்டிப்பாக... அந்த பெண்ணைப் பார்த்ததும், அவளை துப்பாக்கி முனையில் நிறுத்தினேன். அவளுக்கு துப்பாக்கியைப் பற்றி தெரியவில்லை. துப்பாக்கியைக் கண்டு கொள்ளாமலே இருந்தாள். அவளை மிரட்டும் தொனியில் பேசியதும் பயந்து போனாள். அவளது மொழியும் எங்களது தமிழ் மொழியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தது. அதனால் அவள் என்னுடன் பேசத் தொடங்கினாள்”

“நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தையே அதிகமாக்குகிறது தமிழ்! மேல சொல்லுங்க”

“யார் அவள் என்று விசாரித்ததில் அவள் அந்த தீவிலேயே அவர்களது குழுவுடன் வசிப்பதாகக் கூறினாள். அவர்களின் வீடுகள் மலைகளைக் குடைந்து படைக்கப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து யாரும் வெளியே வரக் கூடாது எனவும் கூறினாள். மேலும் மலைக்குள் சூரிய ஒளி வரும் அமைப்பு உள்ளதாகவும், தண்ணீர் அருவிகளும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகில் இருப்பதாகவும் கூறினாள்.”

“உணவுப் பொருட்களை விளைவிக்கும் பள்ளத்தாக்குகளுக்கு மட்டும் இரகசிய வழி வழியாக சென்று திரும்புவது வழக்கமாம். அந்த பெண்ணுக்கு மல்லிகைப் பூவின் மீது உள்ள ஆசையின் காரணமாக அவர்களது வீட்டை விட்டு அவளுக்கு மட்டுமே தெரிந்த பாறை இடுக்கு வழியே வெளியே வந்திருக்கிறாள்”

“தமிழ்! நீங்கள் சொல்வதை எல்லாம் நம்பவே முடியவில்லை. ஏதோ பழைய காலங்களில் சொல்லப்படும் கதை போல் உள்ளது”

“இல்லை கேப்டன்! நான் சொல்வதெல்லாம் உண்மை தான்.. அவள் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அவளுடன் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். பாறைக்குப் பின் இருந்த ஒரு சிறு வழியாக என்னை அழைத்துச் சென்றாள். என்ன ஆச்சர்யம். ஒரு அழகான சிறு கிராமம் போல் இருந்தது. வீடுகள் அனைத்தும் அழகான மரங்களால் ஆன கதவுகளாலும் செய்யப்பட்டிருக்கிறது. நான் அந்த வீடுகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவள் ஓடிப் போய் விட்டாள். நான் அதிகப்படியான அதிர்ச்சியில் தட்டுத்தடுமாறி ஹெலிகாப்டரை அடைந்தேன்.”

“நீங்க சொல்வது உண்மை என்றாலும் கடந்த நான்கு நாட்களாக உங்களின் வழிகாட்டுதலில் அந்த தீவையே சல்லடை போட்டு தேடியாகி விட்டது. அல்ட்ரா சோனிக் முறையிலும் தேடி விட்டோம். நீங்கள் குறிப்பிடுவது போல் யாருமே அங்கு இல்லை. நீங்கள் சென்ற பாறை வழிப்பாதையையும் உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இனியும் நீங்கள் சொல்லும் கதைகளை நம்ப இயலாது தமிழ்!”

“இது கதை இல்லை சார், இன்னும் சில நாட்கள் நம் சோதனையை தள்ளி வைத்து தேடலாம். நான் சென்ற நேரம் இருட்டி இருந்ததால் என்னால் அந்த பாதையைக் கண்டுபிடிக்க இயலவில்லை.”

“மன்னிக்கவும் தமிழ்! நமது இந்த ஆராய்ச்சியின் முடிவுக்காக உலகமே நம்மை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கின்றது. உங்களுடைய இந்த பேத்தல்களுக்காக எல்லாம் நம் சோதனையை தள்ளி வைக்க இயலாது. உங்களை இந்த சோதனை முடியும் வரை தீவுக்கு செல்ல தடை விதிக்கின்றோம். ஆனாலும் கப்பலில் இருந்து ஆராய்ச்சி பணிக்கு உதவுங்கள். Best of Luck!"

தற்கு அடுத்த வந்த சில நாட்கள் என் வாழ்வில் மறக்க இயலாதவை. இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு அந்த தீவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனோ தூங்க முயற்சி செய்தால் அந்த அப்பாவிப் பெண்ணின் முகமே நினைவுக்கு வந்தது.

இன்று ஆய்வின் கடைசி நாள். மதியம் 1 மணிக்கு உலையை வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வெடித்தும் இருந்தது. பாதுகாப்பிற்காக கப்பல் தீவில் இருந்து பல நாட்டிக்கல் தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. சில மணிகளில் இந்தியாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து, எந்த கதிர்வீச்சும் இல்லை என அறிவிக்கப்பட்டது. எனவே தீவை நோக்கி மேல் தகவல்களுக்காக கப்பல் சென்று கொண்டிருக்கின்றது. தீவு இருந்த இடமே தெரியாமல் இருந்தது.

கப்பல் முன்னேறிக் கொண்டு இருந்தது. கப்பலின் முகப்பில் நின்று கொண்டு இருந்தேன். என் அருகில் சான்சஸூல் எதையோ பறிகொடுத்தவர் போல் தீவு இருந்த இடத்தை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். கடலில் ஏதோ மிதந்து வருவது போல் இருந்தது. அருகே வர வர அது என்னவென்று புரிந்தது...

“அது.. அதே தான்.. இது அந்த பெண் வைத்திருந்த பூக்கூடை”
எனது கத்தலில் அனைவரும் கப்பலின் முகப்பிற்கு வந்திருந்தனர். பூக்கடையை வீரர்கள் கப்பலுக்கு எடுத்து இருந்தனர். கப்பல் நகர நகர மரக்கதவுகளும், மரச் சாமான்களும் மிதந்து வந்து கொண்டு இருந்தன. இன்னும் தீவை நெருங்கும் போது மரங்களில் சிக்கிய வண்ணம் பிணங்கள் தெரிய ஆரம்பித்து இருந்தது. ஆதிவாசிகள் மாதிரியான ஆடைகளுடன்...

ஆளில்லாத தீவினிலே..... முழு நீள சிறுகதை - 2

ஆளில்லாத தீவினிலே..... முதல் பகுதி

காலை சூரியன் தனது செங்கிரண கைக்களை விரித்துக் கொண்டு வேகமாக உதித்துக் கொண்டு இருந்தான். கப்பலில் ஆட்கள் வேலைக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. இரவில் கேட்ட சத்தங்களின் திகைப்பில் இருந்து மனம் இன்னும் மீண்டு இருக்கவில்லை.

மேலே வந்து பார்த்த போது தீவுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அதில் தேவையான தொழில் நுட்பக் கருவிகளும், உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இன்றைய எனது பணி கொஞ்சம் கடினமானதாக இருக்கும் என்றே தோன்றியது. எங்கள் குழுவில் முக்கிய குழு ஹெலிகாப்டர் வழியாக மலையின் உச்சியில் இருக்கும் முக்கிய ஆராய்ச்சி நிலையத்தை அடையும். அங்கிருக்கு ஆரம்பமாகும் ஆழ்துளையில் வெடிப்புப்பைத் தொடங்க வேலை நடக்கும். மற்ற சில குழுக்கள் தீவின் ஓரங்களில் உள்ள சிறு குன்றுகளில் ஏற்கனவே பொருத்தப்பட்ட டிரான்ஸ்மீட்டர்களை சரி பார்க்க வேண்டும்.

ஆழ்துளையில் வெடிப்பு நிகழும் போது தீவு முழுவதும் வெடித்துச் சிதறும் என்பதால் அதன் சக்திகளை அளவிட இந்த டிரான்ஸ்மீட்டர்கள் உதவும். இதை பல கிலோ மீட்டர் தூரத்தில் நிற்கப் போகும் எங்கள் கப்பல், தூத்துக்குடி, அந்தமான், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் இருக்கும் கட்டுப்பாடு அறைகள் கண்காணிக்கும்.

காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. எனக்கு தேவையான பொருட்களை முதுகில் சுமந்து கொண்டு தீவில் ஒரு புறத்தில் இறங்கி இருந்தேன். எங்களை இறக்கி விட்டு விட்டு ஹெலிகாப்டர் பராமரிப்புப் பணிக்காக கப்பலுக்கு வேகமாக நகர்ந்திருந்தது. என்னுடன் வந்திருந்தவர்கள் அனைவரும் தத்தமது உடைமைகளை எடுத்துக் கொண்டு தயாராக இருந்தனர். பல தடவை வந்த பழக்கமாக இடம் என்றாலும், இரண்டு நாட்களாக கண்ட கனவுகளாலும், அமானுஷ்யமான உணர்வுகளாலும் ஏனோ ஒரு கலவரமான உணர்வில் இருந்தேன்.

மா
லை ஆகிக் கொண்டு இருந்தது. வழி மாறிச் சென்றுவிட்டதால் உடன் வந்தவர்களை தவற விட்டு இருந்தேன். வழியில் இருந்த பல இடர்களால் நேரம் தாமதமாகி இருந்தது. ஒரு பாம்பு வேறு இடைமறித்து, அதை சுட்டுத் தள்ள வேண்டி இருந்தது. வேகமாக இருள் சூழ ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. ஹெலிகாப்டர் திரும்பி வந்து காத்துக் கொண்டிருக்கும். கையில் இருக்கும் வாக்கி - டாக்கியும் சார்ஜ் இல்லாமல் செத்துப் போய் இருந்தது.

திடீரென்று அந்த ஏகாந்தமான பாடல் பாடும் ஓசை கேட்க ஆரம்பித்து இருந்தது. அதோடு சுகந்தமாக மல்லிகைப் பூவின் வாசமும் வர ஆரம்பித்து இருந்தது. நேற்று கனவில் கேட்டது வாத்தியங்களின் ஒலியாக மட்டுமே இருந்தது. இன்று கேட்பது ஒரு பெண்ணின் குரல். இனிமையான குரல்... இதுவரை கேட்டிராத முறையில் கொஞ்சம் கடினமாக தமிழில் பாடிக் கொண்டு இருந்தாள். குரல் வந்த திசையை நோக்கி கால்கள் நகரத் துவங்கின.... சிறு குன்றுகளுக்கு இடையே இருந்த குறுகிய பள்ளத்தாக்கில் இருந்து தான் அந்த குரல் வந்து கொண்டு இருந்தது.

அங்கே மல்லிகைப் பூக்களின் செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன. அதில் இருந்து ஒரு பெண் பூக்களைப் பறித்து தன்னிடம் இருக்கும் பூக்கூடையில் போட்டுக் கொண்டு இருந்தாள். வித்தியாசமான பூக்களாலும், பருத்தியாலும் ஆனது போன்ற ஆடை அணிந்து இருந்தது ஒரு பழைய நாகரீக பெண் போல தெரிந்தாள்.

மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டு அந்த பெண்ணுக்கு அருகில் செல்லத் துவங்கினேன். அழகான குரலில் பாடிக் கொண்டே இருந்தாள். மெதுவாக இடுப்பில் இருந்த பிஸ்டலைக் கையில் பிடித்தவனாக அவளுக்கு அருகில் நெருங்கி இருந்தேன்.

“அங்கேயே நில்! யார் நீ”

கையில் இருந்த பூக்கூடையை கீழே தவற விட்டவளாக அதிர்ந்து போய் திரும்பினாள். என்னைக் கண்டதும், ஏதோ இதுவரைப் பார்க்காத ஒன்றைப் பார்தது போல் விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்தாள்....

இறுதிப் பகுதி

ஆளில்லாத தீவினிலே..... முழு நீள சிறுகதை - 1

எனக்கு நேரே நிற்க வைக்கப்பட்டிருந்த அந்த பத்துப் பேரையும் பார்க்கும் போது பாவமாக இருந்தது. காட்டுவாசிகள் போல் உடை அணிந்து இருந்தனர். அதில் நடுமையமாக நின்றிருந்த அந்த அழகான பெண்ணைப் பார்க்கும் போது ஏனோ மனம் அவள் பேரில் மயங்குவது போல் இருந்தது. என் கையில் இருந்த வாள் சூரிய வெளிச்சத்தில் பட்டு மின்னிக் கொண்டு இருந்தது. எனக்கு அருகில் இருந்த கேப்டன் கையைக் காட்ட என் வாள் மின்னல் வேகத்தில் சுழன்றது. சில வினாடிகளில் அங்கிருந்த பத்து பேரின் தலையும் வெட்டப்பட்டு கீழே கிடந்தது. எனது முகம், ஆடை முழுவதும் சூடான இரத்தம் பட்டு ஒழுகிக் கொண்டு இருந்தது. அந்த பெண்ணின் தலை தரையில் உருண்டு காலுக்கு கீழ் வரும் போது கலகலவென சிரிக்க ஆரம்பித்து இருந்தது.

சட்டென்று கண்ணைத் திறந்து பார்த்த போது படுக்கையில் இருந்தேன்... ஓ..கனவு.. உடல் முழுவதும் வியர்த்து ஒழுகிக் கொண்டு இருந்தது. என்ன குரூரமான கனவு... அந்த காட்டுவாசிகளை என் கையால் வெட்டிக் கொள்வது எவ்வளவு கொடுரம்...

அறையை விட்டு வெளியே வந்த போது, கப்பல் மிதமான வேகத்துடன் சென்று கொண்டு இருந்தது. மெதுவாக கப்பலின் மேல் தளத்திற்கு வந்த போது அங்கே குழுத் தலைவர் சான்சஸ் நின்று கொண்டு இருந்தார்... ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினார்

“ஹாய்! தமிழ்! என்ன இப்படி வேர்த்து விறுவிறுத்துப்போய் வந்து கொண்டு இருக்கிறாய்?”
“ஒரு கெட்ட கனவு சீப்... அதான்”
“ஓ... நான் கூட முதல் தடவை நீ கப்பலில் வந்த போது, வாந்தி எடுத்து அமர்க்களம் செய்தது நினைவுக்கு வந்து விட்டது”
கலகலவென சிரிக்கத் தொடங்கி இருந்தார். நம் நிலைமை நமக்கு தானே புரியும்? எதுவும் பேசாமல் கப்பலின் முனைக்கு சென்று நின்று கொண்டேன். தூரத்தில் வங்காள விரிகுடாவின் எல்லை முடிவே இல்லாமல் விரிந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இடையிடையே சிறு சிறு தீவுக்கூட்டங்கள் தெரிந்தன.

என்னை உங்களுக்கு அறிமுகம் செய்யவில்லையே? நான் தமிழ் பிரியன்... இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பணியாளர்களில் ஒருவன். பொறியியல் முதுகலைப் பட்டம் படித்து, பின்னர் சில ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு விட்டு இந்த பணியில் இணைந்துள்ளேன். இப்போது நாங்கள் கப்பலில் ஒரு தீவுக்கு சென்று கொண்டு இருக்கின்றோம்.

இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் உலகில் உள்ள அவசரத் தேவையான மின்சாரத்தை புதிய முறையில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதில் ஒரு முக்கியமானவர்களில் நானும் ஒருவன். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Indionium (இண்டியோனியம்) என்ற தனிமத்தை செறிவூட்டி சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றலைக் கொண்டு அதிக அளவில் மின்சாரம் கண்டுபிடிக்க இயலும் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். யூரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்றவற்றை செறிவூட்டி, மின்சாரம் எடுக்கும் முறை மனித குலத்தின் அழிவுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் அதை இந்தியா முற்றிலுமாக கைவிட்டு இதில் இறங்கி உள்ளது.

இண்டியோனியத்தை சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றல் சில மணி நேரங்களில் குன்றி விடும். இதனால் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது என்றும் கண்டுபிடித்துள்ளோம். ஓரு தீவை இண்டியோனியம் குண்டு வைத்து தகர்க்கப் போய்க் கொண்டு இருக்கிறோம்.

வங்காள விரிகுடாக் கடலில் அந்தமான் தீவுகளுக்குக் கீழே கேர்க்கஸ் என்ற தீவுக்கு செல்கிறோம். அந்த தீவைத்தான் குண்டு வைத்து தகர்க்கப் போகின்றோம். சுமார் 6 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் உள்ள அந்த தீவு முழுவதும் கடுமையான பாறைகளைக் கொண்ட மலையினால் ஆனது. சுமார் 1000 மீட்டர் உயரம் உள்ள அந்த மலையின் மேல் இருந்து சுமார் 2000 மீட்டர் ஆழத்திற்க்கு துளை உருவாக்கப் பட்டுள்ளது. இண்டோனியம் செறிவூட்டப்படும் போது அந்த தீவு முற்றிலுமாக வெடித்து சிதறி விடும். அதன் மூலம்உலை வெடித்தால் இருக்கும் சேதாரங்களையும், கதிர்வீச்சின் வீரியத்தையும் கணக்கிட உத்தேசித்துள்ளோம்.

கப்பல் கோக்கஸ் தீவுக்கு அருகில் இருப்பது தெரிந்தது... மேற்கு திசையில் கதிரவன் தனது கைகளை சுருக்கிக் கொண்டு மறைந்து கொண்டு இருந்தான். கப்பல்தீவில் இருக்கும் அந்த நெடியாக மலை சோகமாக பார்ப்பது போல் இருந்தது. நங்கூரம் பாய்ச்சி நீர்மட்டம் அதிகமாக இருக்கும் இடத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டது.

இரவு மணி 11.00 .... கடலின் மேல் தளத்தில் நின்று, கடலை ரசிப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். கடல் அலைகள் தீவின் பாறைகளில் மோதும் ஓசை காதுகளில் வந்து அறைந்து கொண்டு இருந்தது. அப்போது தீவில் இருந்து அந்த மெல்லிய ஒலி கிளம்பத் தொடங்கி இருந்தது..... டம்டம் என்று ஆரம்பித்த ஓசை சிறிது சிறிதாக அதிகமாகி திடீரென்று நின்று போய் இருந்தது

சான்ஸன் கப்பல் மேல் தளத்திற்கு வருவது தெரிந்தது.

“ஹாய் தமிழ்! கடல் என்ன சொல்லது? ஏதாவது கவிதை சொல்லுங்களேன்”
“இல்லை சீப்! இந்த தீவில் மக்கள் வசிக்கிறார்கள் போல தெரிகிறது.. சிறிது முன் அங்கே ஏதோ இசைக்கும் சத்தம் கேட்டது”
“ஹா! ஹா! ஹா! அதெல்லாம் அலைகளின் ஓசையாக இருக்கும்... இங்கு நான் பல மாதமாக ஆராய்ச்சி செய்து இருக்கிறேன்.இந்த தீவில் சில சிறு விலங்குகளைத் தவிர வேறு யாருமே இல்லை. இன்ப்ரா ரெட் கதிர்களை அனைத்து பகுதியிலும் செலுத்தி உறுதி செய்து விட்டோம். மனிதர்கள் யாருமில்லை.. மலையைக் குடைந்து நமது உலையை ஏற்படுத்தி விட்டோம். அனைத்து உபகரணங்களையும் பொருத்தியாகி விட்டது. அப்படி யாராவது இருந்தால் இதற்குள் தெரிந்திருக்கும்”
“இல்லை சீப்! என் மனதுக்கு உறுத்தலாக உள்ளது... இங்கு யாரோ வாழ்கிறார்கள்”
“தமிழ்! உனக்கு இதே வேலையாய் போய் வீட்டது. இரவு நன்றாக தூங்கி எழு! எல்லாம் சரியாகி விடும். காலையில் சீக்கிரம் தீவுக்கு செல்ல வேண்டும். பை.. குட் நைட்”

சான்சஸ் கீழே சென்று விட மீண்டும் தீவில் இருந்து அந்த இசை கேட்க ஆரம்பித்து இருந்தது....

இரண்டாம் பகுதி பார்க்க

இறுதிப் பகுதியைப் பார்க்க

Wednesday, October 29, 2008

துபாய் நினைவுகள் - 7 வருஷமாக கூடவே ஒட்டி வந்த உறவு!

சமீபத்தில் ஒருநாள் அலுவலகத்தில் வேலையில் இருக்கும் போது, தூக்கம் வராமல் மொட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நாமளும் 1998 முதல் 10 வருடத்தை இப்படியே ஓட்டி விட்டோமே என்று எண்ணிக் கொண்டேன். அப்பத்தான் அந்த யோசனை வந்தது... துபாயில் இருந்த 7 வருடத்தில் நம்மோடு கூடவே இருந்த அதை நாம எப்படி மறந்து போனேம் என்று?? அப்பத்தான் நினைவுக்கு வந்தது.

எப்போதெல்லாம் நான் களைத்துப் போனேனோ அப்போதெல்லாம் அது கூடவே வந்தது. அகோரமான துபாய் வெயிலில் நொந்து போன போதெல்லாம் தாகம் தீர்த்தது. பசியால் துவண்ட போதெல்லாம் அருமருந்தாக வந்து உதவியது. உடல் தளர்ந்து போய் இருக்கும் போதெல்லாம் தளர்ச்சியைப் போக்கி உற்சாகத்தை அளித்தது.

என்ன அது? கீழே பாருங்கள்... இது தான் அது...




சுமார் 250 மிலி அளவுள்ள உப்பு சேர்க்கப்பட்ட குடிக்கத் தயாரான மோர் (Laban Drink). 50 Files மதிப்புள்ளது. (அரை திர்ஹம்). இவ்வளவு புகழ்வதற்கு ஏற்றதா இதுவென்றால்.. ஆம்... கண்டிப்பாக அதெற்கெல்லாம் ஏற்ற தகுதியான ஒரு பானமே.

துபாயில் இருந்த காலங்களில், பகலில் நிழலில் இருந்த நேரங்களை விட வெயிலில் இருந்த நேரங்களே அதிகம். அதிகப்படியான வெயிலினாலும், ஈரப்பத மிகுதியால் உருவாகும் வியர்வையாலும் உடல் தளர்ந்து போய் விடும். வெறும் தண்ணீரைக் குடித்தாலும், தலை வழியாக ஊற்றிக் கொண்டாலும் அதனால் ஏதும் பயன் இருந்ததில்லை. ஏனெனில் குடிக்கும் நீர் அனைத்தும் சில நிமிடங்களில் வியர்வையாக உடல் முழுவதும் இருந்து வெளியேறி விடும்.

அப்போது உடலில் நீரின் அளவை தக்க வைத்துக் கொள்ள இதுவே உதவியது. காலை 6:30 மணிக்கு அறையில் இருந்து கிளம்பும் போதே மதியத்திற்கான சாப்பாடை எடுத்துச் செல்ல வேண்டும். மதியச் சாப்பாடு காலை 4 மணிக்கே தயாரிக்கப்பட்டு தயாராக இருக்கும். அதை எடுத்துக் கொண்டு போய் மதியம் 2 மணிக்கு பார்க்கும் போது ஒன்று சாதம் கெட்டுப் போய் இருக்கும், அல்லது குழம்பு கெட்டுப் போய் இருக்கும். ஆனால் பெருமாலான நேரங்களில் இரண்டும் கெட்டுப் போய் இருக்கும். அந்த நேரங்களில் தேவாமிர்தமாய் வயிற்றுக்குள் இறங்கும்.

சில நேரங்களில் இதை வாங்கிவதற்காக இரண்டு கிலோமீட்டர் தூரமெல்லாம் நடந்து கடைக்காக லைந்தி திரிந்து இருக்கின்றேன். பசி அதிகமாகும் போது ஒரு அரைக்கப்பட்ட சிக்கன் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பிரட்டும் (2 திர்ஹம்), ஒரு லெபனுமே(0.50 Files) என் பசியையும் தளர்ச்சியையும் போக்கியுள்ளது. Wafi Mall க்கு அடுத்துள்ள EPPCO பெட்ரோல் ஸ்டேசனின் இருந்த ‘அந்த’ பிலிப்பைனி பெண் நான் சென்றதும் 2.50 திர்ஹமுக்கு பில் தட்டி வைப்பதை வழக்கமாக வைத்து இருந்தாள். நானும் அவளது வழக்கத்தை மாற்ற முயற்சிக்கவில்லை.

இங்கு (சவுதி) பல லெபன்களை சுவைத்து விட்டேன். அந்த சுவையைத் தேடித் தேடி.... ம்ஹூம்.. அதில் 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை. மீண்டும் அந்த சுவையை ருசிப்பதற்காகவாவது ஒரு தடவை மீண்டும் துபாய் வர வேண்டும்... :)

US Election 08 - புது அதிபரு, புது சேரு, புது ஆப்பு... பிரமாதம்

Monday, October 27, 2008

ஈழப்பிரச்சினை - புலிகளும், வைகோவும் செய்ய வேண்டியது என்ன?

இலங்கை ஈழப் பிரச்சினை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் பதிவுலகில் அதைப் பற்றி பலரும் எழுதி வருகின்றனர். ஈழ மக்களின் துயர் துடைக்க வேண்டி எழுந்த தமிழக மக்களின் குரல்கள், வைகோ போன்றவர்களால் சிறிது சிறிதாக வேறு பக்கம் திசை திருப்பப் பட்டு வருகின்றது. இப்போது புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என மாறிக் கொண்டு இருப்பது தெளிவாக தெரிகின்றது.

தின்மலர், இந்து போன்ற நாளேடுகள் வழக்கம் போல் தமது புத்தியை தீவிரமாகக் காட்டத் துவங்கியுள்ளன. மேல் மட்ட மக்களின் கரங்களில் இந்த பத்திரிக்கைகள் இருப்பதால் அதுவே தமிழகம் முழுவதும் பரவத் துவங்கி விட்டது. இந்த நிலையில் புலிகள் அடுத்த செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த ஒரு எழவும் விளங்காதவனின் பார்வையில் தர விழைகிறேன்.

புலியெதிர்ப்பு என்பது இந்தியா, இலங்கை இரு நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தின் சில பகுதி மக்கள், மற்றும் ஈழ விவகாரங்களைப் பற்றி அறியாத இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடமும் புலியெதிர்ப்பு உள்ளது. அதே போல் இலங்கையில் எடுத்துக் கொண்டால், அங்கும் தமிழ் முஸ்லிம்களிலும், மலையக மக்களிடமும், இன்னும் புலிகளை எதிர்க்கக் கூடிய குழுக்களிலும், புலிகளிடம் இருந்து விலகி வந்த குழுக்களிடமும் புலியெதிர்ப்பு உள்ளது.

முதலில் ஈழத்தைப் பொறுத்தவரை புலிகள் என்பது ஒரு தவிர்க்க இயலாத சக்தியாக மாறி விட்டது. இதை ஈழத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒத்துக்கொள்கின்றனர். புலிகளின் முதல் கடமை ஈழத்தில் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பது. சிங்கள அரசில் பங்கு வகிக்கும் முஸ்லிம்கள் புலிகள் அழிக்கப்படுவதை என்றும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் புலிகள் அழிக்கப்பட்டால் சிங்கள வெறியாட்டத்தின் அடுத்த குறி முஸ்லிம்கள் தான் என்பது அவர்களுக்குத் தெரியும். அதே போல் பிள்ளையான், கருணா போன்றவர்கள் துரோகம் செய்ததாக கூறினாலும் அவர்கள் வந்த பாதை மறக்க இயலாதது. அவர்களுக்கும் உள்ளே சுதந்திர தமிழீழம் தான் ஓடிக் கொண்டு இருக்கும்.
இரண்டாவது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடம் ஈழப் பிரச்சினையின் தீவிரத்தை உணர வைப்பது. இந்திய அரசியல் கட்சிகள் ராஜீவ் கொலையை மறக்க வில்லை. அந்த வரலாற்றுத் தவறை விட்டு அவர்களை வெளியே கொண்டு வர வேண்டிய முயற்சிகளில் ஈடுபட வேண்டியது புலிகளின் முக்கிய பணிகளில் ஒன்று. இது நிகழ்ந்தால் தான் புலிகள் மீதான தடையை நீக்க உதவி கிடைக்கும். இந்த சூழலில் வைகோ இருந்திருக்க வேண்டும். வைகோ என்ன செய்திருக்க வேண்டும் என்பதை பெட்டிச் செய்தியில் காண்க.



மூன்றாவதாக தாங்கள் மேற்கொண்ட சமாதான முயற்சிகளையும், அதை துச்சமாக தூக்கி எறிந்த சிங்கள அரசின் அலட்சியத்தையும் உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும். நார்வே போன்ற நாடுகளின் உதவியால் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அதை சிங்கள அரசு உடைத்து தாக்குதல்களை தீவிரப் படுத்தியது.

இலங்கைப் பிரச்சினையை பொறுத்த வரை இந்தியாவின் தலையீடு இல்லாத எந்த தீர்வும் நடப்பது சாத்தியமில்லாதது. புவியியல் ரீதியாக இந்தியாவின் தலையீடு சாத்தியமானது அவசியமானதும் ஆகும். தமிழர்களின் முதல் கட்ட குரலுக்கு பாசில் ராஜபக்சே டெல்லி வந்தது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக உணவுப்பொருட்களும், மருந்துப் பொருட்களும் வர இருப்பது ஆறுதல் அளிக்கின்றது.

ஆனால் இந்த ஆறுதலான விடயங்கள் எல்லாம் ஒரு தற்காலிகமே.. இன்று மகிந்தா போய் அந்த இடத்தில் கோத்தாபாய அமரவும் கூடும். அப்போது இப்படிப் பட்ட வெறித்தனமான தாக்குதல்கள் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டால் அன்று மீண்டும் இந்த சினிமாக்காரர்களும், அரசியல் வாதிகளும் கூடுவார்களா என்பது கணிக்க இயலாத ஒன்று.

இந்த நேரத்தில் சில தெளிவான அறிவிப்புகளே மேற்குறிப்பிட்டவர்களை திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பது. புலிகள் அமைப்பு என்பது தமிழீழ மக்களின் விடுதலைக்காகவே அன்றி ஆட்சி செய்யும் நோக்கத்துக்கு அல்ல. இதுவரை இரத்தம் சிந்திய ஒவ்வொரு தமிழ் வீரனும் தன்னுடைய இரத்தத்தில் சுதந்திர ஈழம் மலரும் என்றே நம்பினான். இப்போது இருக்கும் ஒவ்வொரு வீரனும் நம்புகின்றான்.

சுதந்திர தமிழீழம் கிடைக்கும் பட்சத்தில், ஆயுதங்களை கைவிட்டு, நாட்டில் சாதாரண குடிமகனாக மாறி விடத்தயாராக இருக்க வேண்டும். சில காலம் அமைதியை விரும்பும் வேற்று நாட்டு படைகளின் கண்காணிப்பில் இலங்கை மற்றும் ஈழம் இருக்க ஒத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உலக நாடுகளை இந்த பிரச்சினையின் பக்கம் இழுக்கலாம். இந்தியாவிலும் புலியெதிர்ப்பு என்பது குறையத் தொடங்கும்.

அதே போல் முஸ்லிம்கள், மற்றும் மலையக மக்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்றும், சுதந்திர ஈழத்தின் தலைமை என்பது அனைத்து தரப்பு மக்களும் இணைந்து தேர்ந்தெடுக்கும் ஒரு தலைமை தான் என்று அறிவிப்பதன் மூலம் அனைத்து ஈழ மக்களையும் ஒன்றிணைக்க இயலும். இது போன்ற அரசியல் சார் முன்னெடுப்பு நடவடிக்கைகள் மூலம் ஈழ மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.

இதை புலித் தலைவர் பிரபாகரனே அறிவிப்பு செய்வதன் மூலம் நம்பிக்கை பெருகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. புலிகள் மீது இருந்த கசப்பு கிழக்கு பகுதி மக்களிடம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிள்ளையானும், கருணாவும் இன்னும் உயிருடன் இருப்பது இந்த சமாதான போக்கின் நம்பிக்கையை மேலும் மெருகேற்றியுள்ளது.

மனிதர்கள் அனைவரும் ஒருநாள் மரணித்தை சுகித்தே தீர வேண்டும். இந்த காரணத்தினாலேயே தமது உயிரையும் மதிக்காமல் தாய் நாட்டுக்கு உயிரைத் தியாகம் செய்கின்றனர். அதனால் தான் கழுத்தில் சயனைடு குப்பியைத் தொங்க விடுகின்றோம். உயிரையே மயிராக மதிக்கும் போது பதவியும், தலைமையும் சுதந்திர தமிழீழத்திற்கு முன் துச்சம் என காட்ட வேண்டும்.

தமிழர்களின் உணர்வு சரியான விதத்தில் பயன்படுத்தப்பட்டு, அது இந்தியாவின் அரசியல் தலைமையை நெருக்கி, பல தலைமுறைகளாக நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஈழ தமிழர்களின் வாழ்வில் ஒளி துலங்க வைக்குமா? அல்லது உணர்வு திசை திருப்பப்பட்டு குழாயடிச்சண்டை போல் தொண்டை வற்றியதும் நீர்த்துப் போய் விடுமா? காலம் தான் பதில் சொல்லும். காத்திருக்கின்றோம்.

சிங்களத்தீவினிற்கோற் பாலம் அமைப்போம் என்ற முண்டாசு கவிஞனின் கனவு நிறைவேறும் நாளுக்காக காத்திருக்கும்
தமிழ் பிரியன்.

Sunday, October 26, 2008

நான் பாடிய ’உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலும், பதிவருக்கான உதவியும்


நண்பர் கானா பிரபா ஆஸ்திரேலிய வானொலியில் ஒரு தமிழ் நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். அந்த நிகழ்ச்சியை இணைய வாயிலாகவும் கேட்கலாம். கடந்த வாரங்களுக்கு முன் கண்ணதாசனைப் பற்றியும், அவரது பாடல்கள் பற்றியும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.

ஆர்வ மிகுதியில் இங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு தொலை பேசினேன். கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களைக் கூறிவிட்டு ஒரு பாடலையும் பாடிக் காட்டினேன். கடைசியாக நண்பர் ‘காதல் கறுப்பி’ தமிழனுக்காக கண்ணதாசனின் கடைசி பாடலான மூன்றாம் பிறை படத்தில் இருந்து கண்ணே! கலைமானே! என்ற பாடலையும் கேட்டேன். இறுதியில் அதையும் ஒலிபரப்பினர்.

வானலை வழியே நமது குரல் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றது என்ற பயத்திலேயே பேசியதால் பேச்சே வரவில்லை. சாதாரணமான எங்கு சென்று தமிழ் பேசினாலும் எங்களுடைய மதுரை ஸ்லாங்கை விட மாட்டேன். ஆனால் அன்று எழுத்து வடிவிலான தமிழையே பேச முடிந்தது.

இதை நேரடியாக சந்தனமுல்லை அக்கா கேட்டிருக்கிறார்கள். அதை பதிவு செய்து அண்ணன் கானா பிரபா அளித்திருந்தார். நண்பர்கள் சிலருக்கும் மெயிலில் அனுப்பினேன். அதை தொடர் மெயிலாக்கி மகிழ்வுடன் கும்மி அடித்திருந்தனர்... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்ய்யா உடம்பை ரணகளமாக்கி வச்சி இருக்கீங்க... ;))


அதை பதிவேற்றி பதிவில் வெளியிட கூச்சமா இருக்கு... சர்வேசன் தனது நேயர் விருப்பத்தில் சமீபத்தில் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி பதிவேற்றி இருந்தார். நாம பத்மினியின் தீவிர ரசிகர் என்பதால் அந்த பாட்டு எனக்கு ரொம்பப் இடிக்கும். கருப்பு வெள்ளையில் கூட என்ன பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்... :) பத்மினி ரசிகர் என்றால் வயசான ஆள் என்று நினைக்கக் கூடாது.... பூவே பூச்சூடவா வந்தது கூட தெரியாத பொடிபையன் நான்.

அந்த பாடலையே பாடி பதிவேற்றி விட்டேன். இன்றைய வீக் எண்ட் தண்டனை அனைவருக்கும் அது தான். உச்சரிப்பு, ராகமெல்லாம் சரியில்லன்னு சொல்லக் கூடாது.... ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணிட்டேன்னு நினைக்கிறென்... :)))

Un kannil.mp3 - Thamiz Priyan

அந்த பாடலையே பாடி பதிவேற்றி விட்டேன். இன்றைய வீக் எண்ட் தண்டனை அனைவருக்கும் இது தான்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

புதிதாக பதிவு எழுத வருபவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பது எனது கொள்கை. அவர்களுக்கு உதவவும் ஆவலாக இருப்பேன். டெம்ப்ளேட், கருவிப்பட்டை போன்றவற்றில் எனக்கு தெரிந்ததை உதவுவேன். (ரொம்பல்லாம் தெரியாதுங்க... தெரிந்ததை உதவியா செய்வேன்)

சமீபத்தில் ஒரு பதிவரின் தொடர்பு கிடைத்தது. சில பதிவுகளே எழுதி இருந்தார். உதவி என்று கேட்டதும் ஓடிப்போய் செய்து கொடுத்தேன்.

சில நாட்களுக்குப் பின் அவர் பற்றி தெரிய வந்தது. அவர் பதிவுலகில் பழம் தின்று கொட்டை போட்டவர். கொட்டை எங்கே என்றால் தமிழ் மணத்தில் நட்சத்திரமாக இருந்து வரை கொட்டை போட்டவர். அவமானமாக போய் விட்டது. ஏமாற்றுவது பல வகை.. அதில் இது ஒரு வகை போலும்.. :(

Saturday, October 25, 2008

Doctor Zeenath! ஒரு ஈரானிய படத்திற்கான கதையும், என் விமர்சனமும்


சென்ற வாரம் ஒரு ஈரானிய படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உருது மொழிபெயர்ப்பில் படம் இருந்ததால் புரியவும் செய்தது. கதை வித்தியாசமானதாகவெல்லாம் இல்லையென்றாலும் ஒரு சுவாரஸ்யத்தோடு இருந்தது. படம் பெயரும் தெரியவில்லை. எழுத்து(டைட்டில்) பாதியில் இருந்து தான் பார்த்தேன். அது ஒரு மணல் பாங்கான மீனவ கிராமம். மக்கள் கடல் தொழில் செய்து பிழைத்துக் கொண்டு இருக்கின்றனர். நகரிலிருந்து ஒதுக்குப் புறமாக இருப்பதால், போக்குவரத்து வசதி இல்லை. அதே போல் மருத்துவமனை வசதியும் இல்லை. அவசரம் என்றால் கூட அடுத்துள்ள நகரத்திற்குத் தான் செல்ல வேண்டும்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜீனத் என்ற இளம்பெண், மருத்துவருக்கு படித்து அந்த ஊரில் இருக்கும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்கின்றாள். ஜீனத் நல்ல திறமை மற்றும் ஆர்வமுள்ள பெண் என்பதால் தனது நோயாளிகளை கவனத்துடன் பார்த்துக் கொள்கிறாள். அந்த கிராமத்தினரும் ஜீனத்தை மிகவும் மதிப்புடன் நடத்துகின்றனர்.

ஜீனத் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை விரும்புகிறாள். அவனும் ஜீனத்தை விரும்புகிறான். இரண்டு வீட்டாரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனாலும் இதற்கு ஒரு தடை வருகின்றது. அது ஜீனத் செய்யும் மருத்துவத் தொழில்.

தனக்கு வரக்கூடிய மருமகள் வீட்டு வேலைகள் செய்தால் போதும், வேலை எல்லாம் செய்யக் கூடாது, அது கெளரவத்திற்கு இழுக்கு என்பது மாமியாரின் எண்ணம். திருமணம் செய்யும் வீட்டார்கள் இவ்வாறு சொல்வதால் ஜீனத்தின் பெற்றோர்களும் அவள் வேலைக்கு போவதை விரும்பவில்லை.

ஜீனத்தின் தாய் தடுத்தும், அவளது தந்தை ஜீனத்தை மருத்துவமனைக்கு செல்லக் கூடாது என்று தடுக்கிறார். அதை மீறி மருத்துவமனைக்கு சென்றதால் கோபமுற்று அவளை வீட்டுக்குள் அடைத்து விடுகிறார். பின்னர் மருத்துவர் தொழிலை விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணம் நடக்கிறது.

ஜீனத் தன் கணவனுடன் இருக்கும் ஓர் இரவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது. அந்த சிறுமியின் தாய் தனது குழந்தையை காப்பாற்ற வேண்டி ஜீனத்தை தேடி வருகிறாள். கணவனும், மாமியாரும் தடுக்க அதை மீறி அந்த சிறுமிக்கு மருத்துவம் செய்ய விரைகின்றாள்.

கணவனும் அவளைப் பிந்தொடர்கின்றான். மூச்சுத் திணறலில் இருக்கும் அந்த சிறுமியை ஜீனத் காப்பாற்றி நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்புகிறாள். இதுதான் படம்.

ஜீனத்தாக நடித்து இருக்கும் பெண் அழகாக தனது உணர்வை முகத்திலியே பிரதிபலிக்கிறார். நோயாளிகளுடன் கனிவாக பேசும் போதும், பெண் பார்க்கும் போது வெக்கப்படுவதிலும் ஜீனத்தாக நடித்தவர் மிளிர்கின்றார்.

தந்தை தன்னை வீட்டில் அடைத்து வைத்த பிறகு இரவில் இருட்டில் அமர்ந்து கொண்டு கதறி அழும் காட்சி உருக்கம். அறையின் ஜன்னல் வழியே வெளியே சென்று கொண்டு இருக்கும் ஒரு பெண்ணிடம் தனது நோயாளிகளைப் பற்றி விசாரிக்கும் காட்சியில் உண்மையான ஒரு மருத்துவர் தெரிகின்றார்.

கணவனும். மாமியாரும் மரணத்தின் பிடியில் இருக்கும் சிறுமிக்கு மருத்துவம் செய்ய செல்லக் கூடாது என்று சொல்லும் காட்சியில் அவர்களை எதிர்த்துக் கொண்டு மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு என்று எகிரும் காட்சியும் சிறப்பாக இருக்கிறது.

சிறுமிக்கு சிகிச்சை செய்யும் போது கணவனை சத்தம் போட்டு துரிதப்படுத்தும் காட்சி நல்ல உணர்வைத் தருகின்றது.

அந்த சிறுமியின் சுவாசத்திற்காக குரல்வளையில் கத்தியைக் கொண்டு ஓட்டை போட்டும் போது ஜீனத்தின் முதிர்ச்சியும், அதைக் காண முடியாமல் நடுக்கத்துடன் தலையை திருப்பிக் கொள்ளும் கணவனும் கவர்கின்றனர்.

மாமியாராக நடித்தவரின் பரிதவிப்பான நடிப்பும், தனது மகளுக்காக கலங்கும் ஜீனத்தின் தாயும், ஜீனத்திற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்று தவிக்கும் அதே நேரத்தில் அவளை அறையில் அடைத்து வைக்கவும் தயாராகும் தந்தையும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த படம் மூன்று இடங்களில் என்னை ஏமாற்றி விட்டது.
இடம் 1 :
ஜீனத்தைப் பெண் பார்க்க வரும் காட்சி. ஜீனத்தின் வெட்கத்தில் அறைக்குள் குனிந்து கொண்டு அமர்ந்து இருக்க அவரது அம்மா, வெட்கப்படாமல் சென்று தேநீர், பலகாரம் தருமாறு கூறுகிறார். அப்போதையே காட்சி ஜீனத் செல்லும் போது ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது என்பதற்கு கட்டியம் கூறுகின்றது. ஆனால் அப்படி ஏதும் ந்டக்கவில்லை. அனைவருக்கும் சலாம்(முகமன்) கூறி விட்டு,தேநீ்ர் கொடுத்து நல்லமுறையிலேயே திரும்புகின்றாள்.

இடம் 2 :
மாமியார் மற்றும் கணவனை அந்த இரவில் எதிர்த்து விட்டு, அந்த சிறுமிக்கு மருத்துவம் செய்ய வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். உடனே கணவன் மற்றும் மாமியார் அவளை விலக்கி வைக்க, ஒரே பாட்டில் அவள் ஒரு மொபெட்டுடன் கிளம்பி பெரிய மருத்துவராக மாறி விடுவாள் என்று எதிர்பார்த்தேன். அப்படியெல்லாம் ஏதும் நிகழவில்லை.

இடம் 3:
அந்த சிறுமிக்கு தொண்டைக் குழியில் ஓட்டை போட்டு மூச்சுத் திணறலில் இருந்து காப்பாற்றி மேல் சிகிச்சைக்காக நகரத்திற்கு அனுப்பி வைக்கிறாள். அந்த ஊரே திரண்டு ‘நீதாம்மா இந்த ஊரை வாழ வைக்க வந்த தெய்வம்” இப்படி ஏதாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இதுவும் நிகழவில்லை.

நான் ஏன் இப்படி எல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போக வேண்டும். எல்லாம் நம்ம தமிழ் சினிமாவில் லாஜிக்களைப் பார்த்து பார்த்து கெட்டுப் போனதால் இருக்குமோ?

இப்படியெல்லாம் இந்த ஈரானிய திரைப்படத்தைப் பார்த்து திரை விமர்சனம் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த படம் திருப்தி அளிக்க வில்லை. ஒரு நல்ல படத்தை விமர்சிப்பதற்கு முன் இது போன்று ஒரு மாதிரி விமர்சனம் எழுத நினைத்தேன். எழுதி விட்டேன். ஆனாலும் இப்போது பார்க்கக் கிடைக்கும் படங்கள் எல்லாம் திருப்தி இல்லாமலேயே இருக்கின்றன. இது ஒன்லி சாம்பிள் தான். விரைவில் அப்படி ஒரு நல்ல படம் கிடைக்கும் போது கண்டிப்பாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

Friday, October 24, 2008

சுப்ரமணியபுரம் படக்காட்சியும், சைக்கிளில் இருந்து விழுந்த கதையும்!


சமீபத்தில் சினிமா பற்றிய பதிவில் சுப்ரமணியபுரம் படம் பற்றிச் சொல்லி விட்டு, சைட் அடித்துக் கொண்டே போய் சாக்கடையில் விழும் காட்சியைக் கண்டால் பழைய நினைவுகள் வரும் என்றும், அதே போன்ற அனுபவம் நமக்கும் உள்ளது என்று என்றும் சொன்னதும், நண்பர்கள் அதை எழுதுமாறு நச்சரித்தனர்... (ஸ்ஸ்ஸ்ஸ்.. இருங்கப்பா மூச்சு விட்டுக்குறேன்.)

நாம சைக்கிளோட பிகர் முன்னாடி விழுந்த கதையைக் கேட்க நம்ம ஆட்களுக்கு என்ன ஆர்வம் பாருங்க... நல்லா இருங்கப்பூ! நல்லா இருங்க!

எங்க வீட்டில் இருந்து ஹை ஸ்கூல் கொஞ்சம் தூரம் அதிகம்.10 வகுப்பு வரை நடராஜா சர்வீஸ் தான். பத்தாவது கடைசியில் தான் வீட்டில் சைக்கிள் வாங்கித் தந்தார்கள். 11 வதில் என்னோட சசி என்ற நண்பன் படித்தான். ஆளு பரணி அளவுக்கு இல்லையென்றாலும் (என்னது? பரணி யாரா? இங்க போய் படிச்சிட்டு திரும்பி வாங்க) ஓரளவு நல்ல பையன் தான்.

அவனோட நடுநிலைப்பள்ளியில் படித்த ஒரு பெண்ணை காதல் (?) பண்ணிக் கொண்டு இருந்தான். ஆனா அந்த பெண் இவனை கண்டுக்காத மாதிரி தான் இருக்கும். சசி சைட் அடிக்கும் பெண்ணோட ஒரு கண்ணாடி போட்ட பெண் வரும். சசி, அந்த பெண், சோடாபுட்டி எல்லாம் ஒண்ணா படிச்சவங்க. இந்த கதை நமக்கு தேவை இல்லாதது அதனால் சசியைப் பற்றி அப்புறமா பார்க்கலாம். சசியோடயே சுத்தியதால் இதெல்லாம் தெரியும். இப்ப சொல்ற எல்லாரும் தமிழ் மீடியத்தில் படித்தவர்கள்.

ஒருநாள் பள்ளிக்கு வேகமாக சைக்கிளில் வந்து கொண்டு இருந்தேன். எதிர்த்தால் போல் அந்த சோடாபுட்டி சைக்கிளில் வந்து கொண்டு இருந்தது. நம்ம வண்டி ஹெர்குலிஸ்... சும்மா எருமை மாடு மாதிரி இருக்கும். நம்ம சொன்ன பேச்செல்லாம் கேட்கும். அந்த பெண் வந்தது ஒரு BSA SLR லேடீஸ் ஓட்டும் வண்டி.

நான் வந்து கொண்டிருந்தது நல்ல இறக்கம். கீழே இருந்து அந்த பெண் வந்ததால் கஷ்டப்பட்டு சைக்கிள் மிதித்துக் கொண்டு வந்தது. நான் வேகமா வரும் போதே, எனக்குள் இருக்கும் மிருகம் விழித்துக் கொண்டது. ஒரு வில்லத்தனமான ஐடியா வந்தது.

இறக்கத்தில் பிரேக்கைப் பிடிக்காமல் வேகமாக அந்த பெண்ணின் சைக்கிளை நோக்கி அழுத்தினேன். கிட்டத்தட்ட சில அங்குல இடைவெளியில் சரக்கென்று என்னோட சைக்கிளை திருப்பினேன். ‘தடார்’ ‘டமார்’ என்று சத்தம்.. என்ன நடந்தது?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நான் சைக்கிளில் இருந்து அருகில் இருந்த சாக்கடையில் விழுந்து விட்டேன் என்று தானே நினைச்சீங்க... அதான் இல்லை. அது நல்ல வழுவழுவென்று இருக்கும் ரோடு. மோதுவது போல் போய் விட்டு கடைசி வினாடியில் என் சைக்கிளை திருப்பிக் கொண்டு அழகாக சென்று விட்டேன். அந்த பெண் சைக்கிளை பேலன்ஸ் செய்ய இயலாமல் கீழே விழுந்து கிடக்க, சைக்கிள் அந்த பெண்ணின் மேலே கிடந்தது. இதை சைக்கிளில் இருந்து திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்று விட்டேன். அருகில் இருந்தவர்கள் அந்த பெண் எழுந்திருக்க உதவி செய்தார்களாம். கண்ணாடி வேறு உடைந்து போனதாம்.

அடப்பாவி! சதிகாரா! என்று திட்டுவது இங்கு வரை கேட்குது... அது ஏதோ திமிறில் செய்து விட்டேன். இப்போது வரை அதை நினைத்து வருந்துவேன்.

கொசுறு செய்தி 1 : அந்த சோடாபுட்டிப் பெண் தற்போது கொடைக்கானலில் இருந்து ஒலிபரப்பாகும் கோடை பண்பலையில் (Kodai FM) நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்கின்றார். தெரிந்தவர்கள் என்னுடைய மன்னிப்பை சொல்லி விடுங்கள்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சரி அதெல்லாம் இருக்கட்டும்.. நீ விழுந்த கதை எங்கே என்று கேட்கிறீர்கள் தானே? அதையும் சொல்லிடலாம்.

நமக்கும் சைட் அடிக்க ஒரு பெண் இருந்தது. அப்போது எல்லாம் ‘டேய்! நான் இந்த பெண்ணை லவ் பண்றேன். வேற யாரும் அவளை பார்க்கக் கூடாது’ என்பது நண்பர்கள் மத்தியில் சகஜமாக இருக்கும் வசனம். லவ்(?) பண்ண யாரும் இல்லை என்றால் அது அவமானமாகக் கருதப்படும் காலம்... அப்ப என்னைப் போன்ற அழகானவர்களுக்கு(?) ஆள் இல்லாம இருக்கலாமா? நாம சைட் அடித்தது மெட்ரிகுலேசன் ... ஹிஹிஹிஹி .. நாங்க யாரு? எங்க ஸ்டேடஸ் என்ன?

அப்ப சைக்கிள் வைத்து இல்லாத வித்தையெல்லாம் காட்டுவேன். கைகளை விட்டு ஓட்டுவது, ஹேண்ட் பாரில் காலை வைத்து ஓட்டுவது, மோதுவது போல் வேகமாக சென்று திரும்புவது என வாழ்ந்த காலம் அது.

அன்றைக்கு ஏதோ பொருள் வாங்க மார்க்கெட்டுக்கு வேகவேகமாக போய்க் கொண்டு இருந்தேன். நல்ல காற்றுடன் மழை வேறு. ஒரு கையில் குடையும் மறு கையில் சைக்கிள் ஹேண்ட் பாரும்... ஒரு சந்தின் வழியாக சென்று கொண்டிருக்கும் போது சந்தின் கடைசியில் என்னோட சைட்டும், அவளோடு தோழியும் குடையுடன் வந்து கொண்டிருந்தனர். பார்த்ததும் வழக்கமான குறுகுறுப்பு மேலோங்கி விட்டது.

அருகில் வரும் போது கெத்தாக ஒரு புன்முறுவல் பூக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் இருவரும் சந்தை அடைத்துக் கொண்டு பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முன் சைக்கிளை விட்டு இறங்கினால் பிரஸ்டீஜ் பிராப்ளம் வரும். இறங்கவே கூடாது என நினைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். அருகில் வந்ததும் இருவரும் பிரிந்து சைக்கிளுக்கு நடுவில் வழி விட்டனர். நான் அவள் முகத்தைப் பார்க்க முயற்சிக்க குடை மறைத்துக் கொண்டு பார்க்க இயலாமல் செய்து விட்டது. டமார் என்று சததம்.

உண்மையில் நான் தான் கீழே விழுந்து விட்டேன். சைக்கிள் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம், குடை ஒரு பக்கம் என்று பிரிந்து கிடக்கிறோம். மழையில் உடல் முழுவதும் நனைந்தும் விட்டது. அங்காங்க்ற் கை கால்களில் சிறாய்ப்பு வேறு.

சந்துகளின் நடுவில் சாக்கடைகள் கட்டப்பட்டு இருக்கும். அதில் ஒரு ஓரத்தில் சைக்கிள்கள் சென்று பள்ளமாக மாறி இருக்கும். அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். மற்ற பகுதிகளில் மேடு பள்ளமாக இருக்கும். வழக்கமாக செல்லும் வழி என்பதால் இருட்டில் கூட சென்று விடுவேன். ஆனால் அன்று யோசனை எங்கோ மாறி சென்று விட்டதால் புதையல் எடுக்க வேண்டி வந்து விட்டது.

எப்படியோ தட்டுத்தடுமாறி எழுந்திருக்க, தோழிகள் இருவரும் திரும்பிப் பார்த்துக் கொண்டே கும்மாளமாக சிரித்துக் கொண்டு சென்றனர். ஆனால் இருட்டா இருந்ததால் என்னை அவர்களுக்கு அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் மனதில் பல வருடங்களாக இந்த சந்தேகம் இருக்கு? ஒருக்கால் நம்மை அடையாளம் கண்டு கொண்டு தான் இப்படி வெடி சிரிப்பு சிரித்தார்களோ? இன்னும் இந்த சந்தேகம் அரிப்பா மனசில் இருக்கு... :(

யாராவது அந்த பெண்ணைத் தெரிந்தவர்கள் கேட்டுச் சொல்லுங்க... அன்று இரவு என்னை அவள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை தானே?

கொசுறு தகவல் 2 : அந்த பெண் தற்போது நியூஸிலாந்து நாட்டில் தனது கணவர், மற்றும் குழந்தையுடன் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக கடைசியாக இந்தியா சென்ற போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருஞ்சொற்பொருள்
சைட் - நாம் லவ் பண்ண புக் செய்து வைத்து இருக்கும் பெண். அவர் திரும்பி பார்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
சோடாபுட்டி - கண்ணாடி அணியும் பெண்.

ஒரு பாட்டு மட்டும் பாடிக்கிறேன். இந்த பாட்டுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

எங்கிருந்தாலும் வாழ்க! உன்
இதயம் அமைதியில் வாழ்க
வட்டமோதிரத்துடன் வாழ்க ! உன்
அழகு குழந்தை கணவருடன் வாழ்க!
வாழ்க...வாழ்க...
எங்கிருந்தாலும் வாழ்க!

Thursday, October 23, 2008

Flash News : பின்னூட்டப் பெட்டி மற்றும் டெம்ப்ளேட் தொல்லைகள் - சில விபரங்கள்!

Publish Post

இன்று நமது பதிவர்களில் சிலருக்கு பின்னூட்டப் பெட்டி திறப்பதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிகின்றது. பிளாக்கரில் செய்யும் அப்டேட்களால் இந்த பிரச்சினை நிகழ்ந்துள்ளது போல் தெரிகின்றது. ப்ளாக்கர் டெம்ப்ளேட் இல்லாமல் மற்ற டெம்ப்ளேட் வைத்துள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமான உள்ளது.

அதாவது Post a comment என்பதை இடுகையின் கீழே அழுத்தும் போது, அது மீண்டும் இடுகையிலேயே நிற்கின்றது. ப்ளாக்கர் அறிமுகப்படுத்தியுள்ள பின்னூட்டம் தட்டச்சும் பெட்டியுடன் கூடிய பின்னூட்டப் பெட்டி அமைப்பு தானாக இடம் மாறியுள்ளது காரணமாக இருக்கலாம்.

உங்களுக்கும் இந்த பிரச்சினை இருந்தால்
Dash Board, Settings, Comments சென்று Comment Form Placement என்பதில் Embedded below post என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் அதை என்று மாற்றிக் கொள்ளுங்கள். அதற்கு கீழே சென்று Save செய்து கொள்ளுங்கள்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அதே போல் சிலருடைய பதிவுகளைத் திறக்கும் போது பதிவு திறக்காமல் சிறிது நேரம் அடம் பிடிக்கின்றது. அப்போது கணிணி சுத்தமாக செயல் இழந்து விடுகின்றது. நிறைய பேர் தங்களுடைய டெம்ப்ளேட்டில் தேன்கூடு மற்றும் சிரிப்பான்களுக்கு சில நிரலிகளை பயன்படுத்துகிறோம்.

தேன் கூடு செயல்பாட்டில் இல்லையாததால் அதனால் தாமதமாகின்றது. எனவே அதை எடுத்து விடுவது நல்லது.

உங்கள் டெம்ப்ளேட்டில் எடுக்க வேண்டிய பகுதி

<!--thenkoodu-comments-ping-code-->
<b:if cond='data:blog.pageType == "item"'>
<b:if cond='data:post.numComments != 0'>
<script expr:src=' "http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=" + data:post.url + "&amp;postid=" + data:post.id + "&amp;blogurl=" + data:blog.url + "&amp;cmt=" + data:post.numComments' language='javascript'
type='text/javascript'>
</script>
</b:if>
</b:if>
<!--/thenkoodu-comments-ping-code-->

இரண்டாவதாக சிரிப்பான் (Smiley) தெரிய பலரும் தீபாவின் நிரலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதோ பிரச்சினை இருப்பதால் பதிவு திறக்கும் போது கணிணி ஸ்தம்பிக்கிறது. எனவே அதையும் நீக்கி விடுங்கள்.

உங்கள் டெம்ப்ளேட்டில் எடுக்க வேண்டிய பகுதி
<script type='text/javascript' src='http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js'></script>

வேறு பிரச்சினைகள் இருந்தால் அதையும், அதற்கு பதில் தெரிந்தவர்கள் பதிலையும் கூறிச்செல்லலாம்.

இந்த பதிவு நல்லா இருந்தா பின்லேடனுக்கு மனம் திறந்த கடிதத்தையும் படிச்சிட்டு போகனும்.. :)

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!
லஞ்ச் பிரேக்கில் வந்த அவசரத்தில் பதிவு போட்டதால் தலைப்பு தட்டச்சும் போது எழுத்துப் பிழையாகி அர்த்தம் அனர்த்தமாகி விட்டது. அனைவரும் மன்னிக்க வேண்டுகின்றேன்.

Wednesday, October 22, 2008

US Election 08 - பின்லேடனுக்கு ஒரு மனம் திறந்த மடல்

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!

முதலில் உங்களின் மீது எனக்கு சிறந்த மதிப்பு கிடையாது என்றாலும் இந்த மடலை எழுத வேண்டிய கட்டத்தில் உள்ளது வருந்தத்தக்கதே.

நான் இந்த மடலை எழுதுவதன் காரணத்தை சொல்லி விடுகிறேன். இன்னும் குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு அல்லது நவம்பர் 5 வரையாவது அமெரிக்காவைப் பற்றி எந்த பேட்டியும் தராதீர்கள். மேலும் எந்த விதமான தாக்குதல்களையும் மேற்கொண்டு விடாதீர்கள்.

உங்களது பேட்டிக்காகவும், ஏதாவது சிறு தாக்குதலையாவது மேற்கொள்வீர்களா என உங்களைப் போன்ற மனித குலத்தின் எதிரிகள் காத்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் வேறு யாரும் அல்ல.. ஜார்ஜ் புஷ்ஷூம், அவரது பதவிக்கு வர துடிக்கும் மெக்கெய்ன் என்பவருமே.

நீங்கள் கொடுக்கும் ஒரு சிறு பேட்டி கூட அவர்களது ஓட்டு வங்கியை உயர்த்தி விடும் அபாயம் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே பொருளாதார சீரழிவால் அரண்டு போய் இருக்கும் அமெரிக்க அப்பாவி மக்களுக்கு உங்களது பேட்டியைக் காட்டி,
“அய்யய்யோ, ஆபத்து வந்து விட்டது... ஒசாமா உயிரோடு இருக்கிறார். அவரை ஒழிக்க எங்களுக்கு ஓட்டு போடுங்கள்” என கடைசி கட்டத்தில் கதறி நாடகமாட மெக்கெய்ன் தயாராக உள்ளார்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் தனி விமானத்தில் வந்தாவது உங்கள் காலில் விழுந்து பேட்டி கொடுக்க சொல்வார்கள். அதுக்காக ஒபாமாவுக்கு ஆதரவாக பேட்டி ஏதும் கொடுத்து விடாதீர்கள். வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கூமுட்டை ஆகி விடுவீர்கள். ஒபாமாவுக்கு ஆதரவாக ஒசாமா என்று ஓட்டு சீட்டிலேயே அடித்து விடுவார்கள். ஏற்கனவே ஒபாமா என்பதற்கு ஒசாமா என்று அடித்து விட்டார்கள்.

எனவே கையையும், வாயையும் பொத்திக் கொண்டு நீங்கள் இருந்தாலே உலகம் சுபிட்சமாக இருக்கும்.

கடைசியாக உங்கள் மீது ஏன் மதிப்பு வராமல் வெறுப்பு வருகின்றது என்பதையும் உங்கள் பாணியிலேயே விளக்கி விட்டு விடை பெற ஆசைப்படுகிறேன்.

இஸ்லாத்தின் பெயரைக் கொண்டு நீங்கள் செய்த அல்லது செய்ததாக ஒப்புக் கொண்ட படுகொலைகள் உங்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விட்டதாக உணர்கிறேன்.

திருக்குர்ஆன் இவ்வறு கூறுகின்றது

“திண்ணமாக,ஒரு கொலைக்குப் பதிலாகவோ உலகில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, ஒருவனைக் கொலை செய்கிற இன்னொருவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் உலக மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்” - அல்குர் ஆன் [005:032].

போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

அதே போல் அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போர் புரியும் போது போரில் ஈடுபடாத ஆண்கள், மற்றும் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களைக் கொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. விளைநிலங்களையும், பசுமையான மரம், செடிகளையும் அழிப்பதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

இவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளும் போது, இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் எந்த வன்முறையும் அது நம்மை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடும் என்பது தெளிவு.

மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்
என்ற இறைவசனத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்.

உங்களுக்கும், எங்களுக்கும் இறைவன் நல்லருள் புரிவானாக! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடுவோமாக!

அன்புடன்
சகோதரன்
தமிழ் பிரியன்


அரேபியா - என் வீட்டுத் தோட்டத்தின் காய்கனிகளைக் கேட்டுப் பாருங்கள்!

முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் சின்ன வயசில் இருந்தே ஒரு விவசாய விஞ்ஞானி. எங்கள் வீட்டு சந்தில் நிலக்கடலை செடியை நட்டு நாள் முழுவதும் தண்ணீர் ஊற்றி, நிலக்கடலை வந்து விட்டதா? என்று பார்த்துக் கொண்டிருந்தவன். இரவு தான் நிலக்கடலை வரும் என்ற என் நண்பனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மாலையில் தண்ணீர் தளும்ப, தளும்ப ஊற்றி விட்டு காலையில் வந்து பார்த்த போது. நிலக்கடலையையும் காணோம், செடியும் செத்து போய் இருந்தது.

அப்போதே முடிவு எடுத்தேன்... எப்படியாவது பெரிய விவசாயியாக மாற வேண்டும் என்று... அந்த ஆசையில் இரண்டு ஏக்கர் நிலமெல்லாம் வாங்கி கையை சுட்டுக் கொண்டது வேறு கதை...

இனி மேட்டருக்கு போகலாம்.. வாங்க

நாங்க இருக்கக் கூடிய நகரம் அரேபிய தீபகற்பத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 அடி உயரத்தில் உள்ளது. இயற்கையாகவே மலைப் பிரதேசமாக அமைந்து விட்டதால் வெயில் குறைவு. இதனால் காய்கறிகளின் விளைச்சலுக்கு ஏற்றதாக இருக்கும். நாம் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களும் அங்காங்கே தங்களுக்கு என சில இடங்களை ஒதுக்கி காய்கறிகளை நட்டு பரமாரிக்கின்றனர். விளைச்சலின் நல்ல காய்கறிகள் கிடைக்கும்... இனி ஓவர் டூ படங்கள்...





முதலில் இங்க இருக்கும் சில Landscaping படங்கள்..




ப்ளம்ஸ் செடிகள்.. கொஞ்சம் காயாக இருக்கும் போது புளிப்பாக இருக்கும். சிவந்து பழுத்து விட்டால் நன்றாக சுவையாக இருக்கும்.



அத்திப் பழ மரங்கள்.. இதில் ஆப்பிள் போல, ஆனால் கடித்து தின்ன கடினமான ஒரு காய் கிடைக்கிறது. பெயர் தெரியவில்லை. கடித்து சுவைத்து துப்பி விடலாம்.




திராட்சைத் தோட்டம்...



திராட்சை இங்க செமயா வரும். குளிர்காலத்தில் நான் இங்க வந்த போது மாதுளை, திராட்சை செடிகள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு வெறும் குச்சியாக காட்சியளித்தன. பிப்ரவரிக்கு மேல் குளிர்காலம் முடிந்ததும் எடுத்தன விசுவரூபம்.... இந்த வருடம் செம விளைச்சலாம். (திராட்சை ஆப் சீசனில் எடுத்த படம்)




மாதுளை... விளைச்சல் அபரிமிதமாக இருந்தது. எடுத்தது, தின்றது போக மீதி பழுத்து கீழே விழத் தொடங்கி விட்டது. படத்தில் கீழே கிடப்பவை அனைத்தும் நன்றாக பெருத்து, கீழே விழுந்து வீணாகிப் போனவை. எதுவுமே அதிகமானால் இந்த நிலை தான் போல.. :(



தட்டாங்காய்... முற்றுவதற்கு முன் ஒடித்து, தேங்காய்ப்பூ, பருப்பு போட்டு சமைத்தால் செம டேஸ்ட்டா இருக்கும்ங்க





இது ஒருவகை கீரை. இங்க பாலக்ன்னு பொதுவாக சொல்றாங்க... தமிழ் நாட்டில் இந்த கீரையை சாப்பிட்டத்தில்லை. சுவையாக இருக்கும். அதோட நல்ல சத்துள்ளதாம்.






இது புரோக்கொலி என்ற ஒருவகைச் செடி. நல்ல சத்துள்ளதாம். இங்க கிலோ 15 ரியாலுக்கு விக்கிறாங்க... (சுமார் 4 டாலர்). எனக்கு இது பிடிக்கலை. பிலிப்பினோக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். துளசி டீச்சர் கூட ஒரு பதிவு போட்டாங்க. (செடி நம்ம ஊட்டு செடிதான்... ப்ரோக்கோலியின் ஒரு வகையாம். ஒரிஜினலான்னு தெரியலை. அதில் பூ இல்லாததால் உங்களுக்கு புரிய வேண்டி இணையத்தில் சுட்டு போட்ருக்கேன்)

கேப்பக் கா செடி.. மலையாளிகளின் பேவரைட் அயிட்டம்.. நமக்கு மரவள்ளிக் கிழங்கை விட அந்த சின்னதா இருக்குமே.. அதாங்க சீனிக்கிழங்கு அதான் பிடிக்கும்.
இதுவும் ஒரு வகைக் கீரை தான்., கீரைக்கு பின்னால் வெட்கத்தோட இருப்பது யாருன்னு தெரியுதா?... நம்ம வாழை தான்.
ஒளிஞ்சுக்கிட்டு இருந்த முட்டை கோஸை பிரிச்சு வச்சு இருக்கேன். ஊருல முட்டைக் கோஸை பார்த்தாலே வெறுப்பா இருக்கும். இப்ப ஹிஹிஹி.. கட்டு கட்டுன்னு கட்டுவேன்.








தக்காளி, பாகற்காய்... இன்ன பிற எக்ஸ்ட்ராக்கள்.

Tuesday, October 21, 2008

ஈழப்பிரச்சினை - தமிழர்களின் உணர்வுகளும், என் புரிதல்களும்



சமீபத்தில் தமிழ் மீடியா என்ற பதிவில் வந்த வீடியோ தொகுப்பை பார்த்ததும் என்னால் கண்ணீரை அடக்கி கொள்ள இயலவில்லை. வீடியோ பார்க்க

சில மணி நேரங்களுக்கு அதன் தாக்கங்களில் இருந்து வெளியே வரவே இயலவில்லை. அந்த சிறுமிகளின் ஓலங்கள், விமானத்தை பார்த்ததும் பதுங்கு குழிகளை நோக்கி ஓடும் கொடுமைகள், புலம் பெயர்ந்து செல்பவர்களின் அவலங்கள் என நமது உறவுகள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்ததும் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.

இப்போது தமிழகத்தில் புதிய எழுச்சி பரவியுள்ளது. ஈழத்தில் உள்ள மக்களுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் காலத்தின் என்ற கட்டாயத்தின் அடிப்படையிலாவது குரல் எழுப்பத் தொடங்கி விட்டன. ஈழத்தைப் பற்றி பேசுவதே குற்றம் என்ற நிலை மாறியுள்ளது ஆதரவளிப்பதாக உள்ளது.

இன்று(21-10-2008) சென்னையில் திமுக சார்பில் மனித சங்கிலியும் நடைபெற உள்ளது. திரை உலகத்தினர் இராமேஸ்வரம் சென்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவை அனைத்தும் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. தமிழக மக்கள் மத்தியிலும் ஈழத்தைப் பற்றிய பரிவான பேச்சுக்கள் ஆரம்பமாகி இருப்பது வயிற்றில் பாலை வார்ப்பது போல் இருக்கிறது.

இந்நிலையில் எனக்குள் எழும் சில கேள்விகளை இங்கு வைக்க விரும்புகிறேன். எதற்காக நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்? தமிழகத்தையே ஒன்று கூட்டி மத்திய அரசை திக்குமுக்காட ஏன் வைக்க வேண்டும்? எம்பி பதிவிகளை அனைவரும் ராஜினாமா செய்வோம் என்று எச்சரிக்க வேண்டியது ஏன்?

இவ்வளவு தீவிரமாக தமிழகம் ஈழப் பிரச்சினையில் இறங்கியுள்ளதன் நோக்கம் என்ன? அரசியல் தலைவர்கள் என்ன அறிக்கைகள் கொடுக்கின்றனர்? இவைகளுக்கு என் மண்டையைக் குடைந்ததிலும், இணையத்தில் வரும் பத்திரிக்கைகளைப் பார்த்ததிலும் கிடைத்த விடைகள் இவையே

1. சிங்கள இராணுவம் தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்.
2. ஈழத்தில் இருப்பவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. இந்தியா சார்பில் எந்த இராணுவ, தொழில் நுட்ப உதவிகளும் செய்யக் கூடாது.


தமிழ்நாடே ஒன்று சேர்ந்துள்ள சூழலில் இந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் போதுமா? இதன் மூலம் ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்கு முடிவு கட்டப்படுமா?

தமிழ்நாட்டவர் அனைவரும் ஒன்றிணைவது என்பது இயலாத காரியம். அதிமுக கூட இதில் தனது கருத்தைக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திடீரென்று ஏற்ப்பட்டுள்ள அலை எவ்வளவு நாளுக்கு நீடிக்கும் என்று தெரியாது? ஈழத்தில் இருக்கும் மக்களுக்கு நாம் நிரந்தர நிம்மதியைக் கொடுக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.

மத்திய அரசை வழியுறுத்தி தற்காலிக அமைதியை வரவழைக்கலாம். இந்தியா இராணுவ, பொருளாதார உதவிகள் செய்யாது என அறிவிக்கலாம். இதன் மூலம் தற்காலிகமாக சிங்கள வெறியாட்டம் நிறுத்தப்படலாம்.

இதனால் நன்மை உண்டா என்றால் இல்லை. அடுத்த தேர்தலில் ஆட்சி மாறலாம். புதிதாக வரக் கூடிய ஆட்சி ஈழத்தவருக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கும் என்று சொல்ல இயலாது. அதே போல் இந்தியாவின் வற்புறுத்தலுக்கு பணிந்து இன்று போர் நிறுத்தம் செய்வதாக ராஜ பக்சே ஒத்துக் கொண்டாலும்,நாளையே ராஜ பக்சேயின் இடத்துக்கு கோத்தபாய வந்தால் வெறியாட்டம் அகோரமாக மாறி விடாதா?

தமிழ்நாட்டில் உணர்வு எப்போது மாறும் என்று சொல்ல இயலாது. நாளையே திரிஷாவுக்கோ, நமீதாவுக்கோ, ஸ்ரேயாவுக்கோ திருமணம் என்றாலோ, சிம்ரன் ஏதாவது நிகழ்ச்சியில் எங்காவது காலை நீட்டினாலோ, அல்லது தேர்தல் வந்து விட்டாலோ நாங்கள் அதில் பிஸியாகி விடுவோம். அப்புறம் ஈழத்தை எல்லாம் மறந்து விடுவோம்.

ஆகவே நிரந்தர அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது தான் இன்றைய சூழலில் தேவை என்பது எனது தாழ்மையான கருத்து. அதே நேரத்தில் இலங்கையில் இருக்கக் கூடிய அமைப்புகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, ஈழ மக்களின் பல ஆண்டுகால துயரைத் துடைக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

என் கீழ் தான் அனைவரும் என்ற சித்தாந்தம் நம் மக்களின் துயர் துடைக்க உதவாது என்பதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். சூரியனே மறையாத ஆங்கிலேய ராஜ்ஜியத்தில் சூரியன் கூட இப்போதெல்லாம் வரவே யோசிக்கின்றதாம்.

Sunday, October 19, 2008

oru pathivarukku varan paarkkum padalam மற்றும் கணிணி முகப்பு தொடர் விளையாட்டு



நண்பர் தமிழன் வித்தியாசமான டேக்குக்கு அழைப்பு விடுத்து இருந்தார். நமது கணிணியில் இருக்கும் டெஸ்க் டாப் ஸ்கீரினை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து காட்டனுமாம். என்னய்யா இது கொடுமயா இருக்கு.... சரி நானும் போட்டுட்டேன். இதுதான் என்னோட ஸ்கிரீன். எந்த விதமான போர்ஜரியும் பண்ணாம அப்படியே எடுத்துட்டேன்.

பொதுவாக எந்த உருவப் படங்களையும் ஸ்கிரீனில் வைக்க மாட்டேன். வீட்டில் கூட எந்த புகைப்படமும் சுவரில் இருக்காது.

ஸ்கிரீனில் காலியா தான் இருக்கனும். அப்ப தான் டெஸ்க் டாப்பில் இருப்பதை சுலபமாக தேட முடியும்

ஒரு பேச்சலர் ரூமுக்கு இருக்கும் அடையாளங்கள் எல்லாம் என் ஸ்கிரினுக்கும் இருக்கும். தேவையில்லாத எல்லாமும் கிடைக்கும். அப்பப்ப சுத்தப்படுத்துவேன். அடுத்த வாரமே திரும்ப குப்பை குடவுனா மாறி விடும். இப்ப குப்பை கொடவுனா இன்னும் மாறதப்ப எடுத்தது. இதுவே இப்படின்னா? குப்பையா இருக்கும் போது??? ;))

அடுத்து நான் அழைப்பு விடுப்பது
1. சிங்கை அண்ணன் நிஜமா நல்லவன்
2. பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி
3. பிரியமுள்ள தம்பி சுடர்
4. அன்புள்ள தங்கை மது... (மச்சானோட டெஸ்க்டாப் ஸ்கிரீனை சுட்டு போட்டா கூட ஒத்துக்குவோம்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஒரு பதிவருக்கு வரன் தேடும் படலம்

காட்சி 1

“சுந்தர்! இது அதாண்டா அந்த பொண்ணோட போட்டோ! நல்ல படிப்பு படிச்சு இருக்கா! அழகாவும் இருக்கா! கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை. கை நிறைய சம்பளம் வேற வாங்கறாளாம்”

“போட்டோவைப் பார்த்து எப்படிம்மா தீர்மானிக்க சொல்றீங்க... இன்றைய மாடர்ன் உலகத்துக்கு தகுந்த பெண்ணா இருக்கனும்மா”

“என்னமோப்பா எனக்கு புரியலை. நல்ல குடும்பமா இருக்கு. நம்ம ஜாதிக்காரங்க.. தூரத்து முறையுல் உறவு கூட வருது. அவங்க குல தெய்வமும், நம்ம குல தெய்வமும் ஒன்னு தான்”

“என்னம்மா இன்னும் பட்டிக்காடா இருக்கீங்க! இந்த நவீன உலகத்துல உலக விஷயங்கள் நிறைய தெரிஞ்சு வச்சுருக்குற பெண்ணான்னு பாருங்கம்மா”

“உன்னை மாதிரி கம்ப்யூட்டரில் வேலை செய்யுற பொண்தானே? உனக்கு பிடிச்சா மாதிரி தான் இருக்கும். அண்ணா நகரில் பெரிய வீடு இருக்கு. இன்னும் இரண்டு விடு வேற இருக்காம். வாடகைக்கு விட்டு இருக்காங்களாம். கார் கூட இருக்குது. நல்ல இடமா தெரியுதுப்பா”

“அப்படியாம்மா... எனக்கும் நீங்க சொல்றதைப் பார்த்தா நல்ல இடமா இருக்கும் போல இருக்கு.”

“ஆமா சுந்தர். போட்டோவோட கம்ப்யூட்டர் அட்ரஸ் கூட கொடுத்து இருக்காங்க நீ வேணா பேசிப்ப்பாத்துக்க. அப்புறமா பொண்ணு பார்க்க போகலாம்”

“ம்ம்ம்.. இது அந்த பெண்ணோட இ மெயில் அட்ரஸ்ம்மா. பேசிப் பார்க்கிறேன்ம்மா”

காட்சி 2

sunder : வணக்கம்
Sent at 12:05 PM on Sunday
suha : hai. Who r u?
sunder: என் பெயர் சுந்தர். வரன் பார்க்கும் விஷயமா போட்டோவும், இ மெயிலும் உங்க அப்பா மூலமா கொடுத்தாங்க
Sent at 12:10 PM on Sunday
suha : O... good
sunder: m நீங்க எங்க வேலை பார்க்குறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
Sent at 12:14 PM on Sunday
suha: O..sure. TCS il programmer. irandu varushma irukken. neenga?
sunder: நான் விப்ரோவில் Project Manager! ஐந்து வருடமாச்சு
suha: O.. nice job
sunder:அதென்ன அமெரிக்க தேர்தல் பற்றி ஏதோ எழுதி இருக்கீங்க?
Sent at 12:19 PM on Sunday
suha: I am a blogger. ennoda blog la american electonil Mccainukku atharavaa pathivu pottu irukken
Sunder: ஓ.. அரசியலில் எல்லாம் ஆர்வம் இருக்கா?
suha: brb
Sunder: Ok
Sent at 12:20 PM on Sunday

suha: m... sollunga... friends kooppittanga.. canteen poitten
Sunder: பரவாயில்லைங்க... அரசியல பதிவெல்லாம் போட்டு இருக்கீங்களே? அவ்வளவு ஆர்வமா?
Sent at 12:28 PM on Sunday
suha: Yes, aamaa, arasiyal, matham, samuga piracinikal patri yellaam niraya pathivu ezuthuven.
Sunder: தமிழ் ப்ளாக்ன்னா ரொம்ப பிரச்சினை எல்லாம் வருமே?
Suha: atukkaga namma karuththai sollama irukka mudiyumaa? pirachinakalai kandu odi poka koodathu. ethirthu poraadanum. aththaan innaikku namma samkukaththukku thevaiyaana onnu
Sunder: நல்லா பேசுறிங்க... சரி அப்புறமா பார்க்கலாம். கொஞ்சம் வேலை இருக்கு. ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க... வணக்கம்.
suha: No problem. Bye.

காட்சி 3


“சுந்தர் என்னடா இப்படி சொல்ற? நல்ல குடும்பமா இருக்குன்னு நான் சொன்னதுக்கு நீயும் அப்படித்தாம்மா தெரியுதுன்னு சொன்ன”

“இல்லம்மா.. இந்த பொண்ணு வேணாம்மா”

“என்னடா ஆச்சு உனக்கு?. அந்த பொண்ணை பார்க்கக் கூட போகலையே. அதுக்குள்ள வேண்டாம்ன்னு சொல்ற?”

“இல்லம்மா.. இந்த பெண் வேண்டாம்மா... வேற நல்ல பெண்ணா பார்க்கலாம். கொஞ்சமா படிச்சு, வேலைக்கு போகாம இருந்தாலும் பரவாயில்லைம்மா”

“என்னவோப்பா! இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சரி புரோக்கர் வரட்டும். வேற இடம் பார்க்க சொல்லலாம்”

Saturday, October 18, 2008

துபாய் நினைவுகள் - குசும்பனும், நாங்களும் கவிழ்ந்த இடங்களில் ஒரு சுற்றுலா கட்டுரை

.
.
துபாயில் வாழ்ந்த காலம் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் ஒரே ஜாலியான வாழ்க்கை வாழ்ந்தோம். உடன் வேலை செய்யும் அனைவரும் ஒத்த வயதையுடையவர்கள். எல்லோரும் 20 To 22 வயதுக்குள் உள்ள இளவட்டங்கள்.

நிறுவனத்தில் இருப்பவர்களில் 20,25 பேர் ஒரே குரூப்பாக சுற்றிக் கொண்டு இருப்போம். 12 பேர் ஒன்றாக ஒரே மாதிரி டிசைனில் சட்டை தேடி துபாய் மார்க்கெட்களில் அலைந்த காலம் உண்டு. கடைசியில் 12 சட்டை ஒன்றாக கிடைக்க வேண்டுமென்பதால் மை புளூவில் வாங்கிய கொடுமையும் நடந்தது.

எப்போதும் ஒன்றாக வேலை, பிரயாணம், சாப்பாடு என்று சுற்றுவோம். வெட்டி அரட்டைகளில் திடீர் திடீர் என்று ஐடியாக்கள் உதிக்கும். அப்படி உதித்தது தான் அல் அய்ன் சுற்றுப்பயணம். துபாயில் இருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் இருக்குமிடம் அல் அய்ன். கடலில் இருந்து தூரமாகவும், மேட்டுப் பகுதியிலும் இருப்பதால் கொஞ்சம் இதமான வெப்பநிலை நிலவக் கூடிய இடம்.

சிலர் மட்டுமே செல்லலாம் என போட்ட திட்டம் அனைவரிடமும் பரவி குரூப் முழுவதும் செல்ல தயாராகி விட்டது. வெள்ளி விடுமுறையை அனுசரித்து, எல்லாரும் போகாதீங்க... கம்ப்ளைண்ட் வந்தா போக ஆள் வேணும் என்ற சூப்பர்வைசரின் சொல்லை காற்றில் விட்டுவிட்டு கிளம்பியாச்சு.’

cars மூலம் 14 பேர் அமரக்கூடய வாகனம், மற்றும் ஒரு கார் வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். அதோடு ஒரு காரும் ... மொத்தம் சுமார் 20 பேருக்கு மேல் இருப்போம். விடிகாலையில் கிளம்பி அல் அய்னை சென்றடைந்த போது பசி வயிற்றைக் கிள்ள வழக்கம் போல் ஒரு மலையாளி கடையில் அடைக்கலமானோம். புரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, சென்னா, கீமா, பருப்பு, சட்னி, சாம்பார் என அனைத்தையும் ஒரே டேபிளில் வாங்கி வைத்து தின்று ஒரே கரச்சல் தான்... கூட்டம் கடையை விட்டு வெளியேறிய போது தான் அந்த சேட்டன் நிம்மதி பெருமூச்சு விட்டார்.... ;)))

அல் அய்னில் ஒரு சிறு குன்று போல் மலை உள்ளது. வளைந்து வளைந்து சென்று மலை உச்சியை அடைந்தால், அங்கு மேலே ஒரு சமதளமான இடம் உள்ளது. வந்தவர்களில் பெரும்பாலோர் ராம்நாடு, தஞ்சைப் பகுதியினர். மலையைப் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு போல... ஆஆஆஆ வென்று பார்த்தனர். நாம மேற்குத் தொடர்ச்சி மலையையே மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கோமே.... ஒன்னும் தோணலை... ;))




மலையில் இருந்து இறங்கி சென்ற இடம் அல் அய்ன் உயிரியல் பூங்கா. மொட்டை வெயிலில் பூங்கா முழுவதும் சுற்றினோம். நிறைய பறவைகள் பார்த்த நினைவு உள்ளது. வரிக்குதிரை, ஒட்டகசிவிங்கி எல்லாம் பார்த்தோம். (நிறைய மறந்து விட்டதுங்ண்ணா). ஒட்டகசிவிங்கிக்கு இலை தளை கொடுப்பது போல் போட்டோ எடுத்தோம். வரிக்குதிரைக்கு அருகில் போட்டோ எடுக்க போனால் அது ‘பின்’புறத்தை காட்டியே நின்று கொண்டிருந்தது.... ;)






ஜூவில் இருந்து வெளியேறி வெள்ளி என்பதால் மதியம் தொழுது விட்டு, பிரியாணி சாப்பிட்டோம். இங்கு ஏதும் அழிச்சாட்டியம் செய்யவில்லை. டிஸண்டான ஹோட்டலில் டீஸண்டா இருப்போமாக்கும் நாங்களெல்லாம்..

அடுத்து சென்றது Alain Fun City. கிட்டத்தட்ட நம்ம கிஷ்கிந்தா மாதிரி இருக்கும். (சென்னையில் கிஷ்கிந்தா தான் தெரியும்). மதியத்திற்க்கு பிறகு அங்கு சென்றோம். ரோலர் கோஸ்டர் எனப்படும் இராட்டினங்கலில் ஒரே குதியாட்டாமும், கழியாட்டாமும். அங்கு உள்ள குறிப்பிடத்தக்க இடம் ஐஸ் ஸ்கேட்டிங் செய்யும் உள் அரங்கம்.

தரை தளம் முழுவதும் உறை பனியில் இருக்கிறது. ஸ்கேட்டிங் ஷூக்களை அங்கேயே வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 7,8 ஷூக்களை வாடகைக்கு எடுத்து பகிர்ந்து கொள்வதாக பேச்சு. ஷூவைப் போட்டு களத்தில் இறங்கினால் டமார் டமார் என்று சத்தம். என்னடாவென்று பார்த்தால் எல்லாம் வழுக்கி விழுந்து கீழே கிடக்கிறான்கள்.

சில பொறுப்பான நண்பர்கள் ‘உங்களுக்கு ஸ்கேட்டிங் பண்ணத் தெரியலை’ என்று சொல்லி ஷூக்களை அணிந்து கொண்டு எச்சரிகையாக களத்தில் இறங்க, ம்ம்ம்ம்ம் அந்த கைப்பிடியை பிடித்துக் கொண்டு கூட நிக்க முடியவில்லை. கை பிடியை விட்டாதானே உள்ளே செல்ல.... மழை வெள்ளத்தில் மர வேரை பிடித்து தத்தளித்தது போல் தான் நடந்தது. மீறி முயற்சித்தவர்கள் எடுத்த புதையல்கள் ஏராளம்.

மூன்று பாகிஸ்தானி இளம்பெண்கள் ஷூக்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். ஆகா, கீழே விழுந்து புதையல் எடுக்கப் போகிறார்கள் என்று பார்த்தால் சர் சர்ரென்று வழுக்கி இங்கும் அங்கும் பறக்கிறார்கள். ஏளனமாக நம்மை பார்த்து சிரிப்பு வேற... சே..அவமானமா போச்சேன்னு யாராவது ஐஸ் தரையில் நடக்க முயன்றால் மீண்டும் டமார்.... அதிக சேதாரம் தான் போங்க... ;)

இறுதியில் அங்கே ஓடும் டிரெயினில் ஜாலியாக (எங்கே ஜாலி... எல்லாருக்கும் கை, கால், பின்னால் என்று செம அடி + வலி) சவாரி செய்து விட்டு ஊர் திரும்பினோம்.

மறுநாள் வேலைக்கு கிளம்பும் போது சொல் பேச்சு கேக்காததற்காக சூப்பர்வைசர் திட்டு மழை பொழிய, வழக்கம் போல் எருமை மாட்டில் மழை பெய்தது போல் நின்று சமாளித்தோம்... ஆல் இன் த கேம்யா... 10 பேர் மறுநாள் மெடிக்கல் லீவு எடுத்தது கடைசிக் கதை.







போட்டோக் குறிப்புகள்
முதல் இரண்டு போட்டோக்கள் அல் அய்ன் ஜூ போட்டோக்கள். இணையத்தில் சுட்டது.

மூன்றாவது போட்டோ அல் அய்ன் மலை உச்சியில் உள்ள சமதளம். அம்மணி யாருன்னு தெரியாது. அதுவும் இணையத்தில் சுட்டது.

கடைசி மூணு போட்டோவிலும் நான் இருக்கிறேன். (பழைய போட்டோ - ஸ்கேன் செஞ்சது. ஆண்டு 2002). இன்னும் போட்டோக்கள் ஊரில் இருக்கலாம்.

கடைசி இரண்டு போட்டோக்களில் இருப்பவர்கள்.
தமிழ் பிரியன்
காதர் (திருவாரூர்)
செந்தில (கொளத்தூர்)
ரியாஜ் (குரோம்பேட்)
நவ்பர் (கீழக்கரை)
லியாகத் (ஆற்காடு)
லியாகத்துக்கு நாளை (19-10-2008) திருமணம்... இனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் நண்பா!






இந்த இரண்டு வீடியோவிலும் இருப்பவர்கள் நமக்கு நல்லா தெரிஞ்ச பதிவர்கள். அதே ஐஸ் ஸ்கேட்டிங்கில் புதையல்களை அள்ளியவர்கள்.. எங்க கண்டுபிடிங்க பார்க்கலாம். குசும்பன் பெயர் பதிவை சூடாக்க போட்டதுங்ண்ணா.. ;)

வீடியோ நன்றி: மின்னுது மின்னல்

Friday, October 17, 2008

சில பினாத்தல்களும், குறள் கதை, மற்றும் தமிழ் பதிவர்களின் ஆர்வமும்

.
.
ஒரு வீட்டுல இரண்டு பூனைகள் இருந்தது. ஒன்னு நம்ம துளசி டீச்சரோட கோகி மாதிரி பெருசு. ஆனா கோகி மாதிரி நல்ல கதாநாயகன் இல்ல... கெட்ட் வில்லன். இன்னொரு பூனை குட்டிப் பூனை. பார்க்க அழகா இருக்கும்.

பெரிய பூனைக்கு குட்டி பூனையைப் பார்த்தாலே ஆகாது. எப்பப் பாத்தாலும் குட்டிப் பூனையை மிரட்டி, உருட்டிக் கிட்டே இருக்கும். திடீரென்று ஒருநாள் அதோட வில்லத்தனமான மூளை வேலை செய்தது. இந்த குட்டிப் பூனை இருந்தா தானே பிரச்சினை. அதையே இல்லாம ஆக்கிட்ட?

அவங்க வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு பெரிய மெயின் ரோடு போகுது. எப்பப்பார்த்தாலும் நிறைய கார்கள் சர், சர்ரென்று போய்க்கிட்டே இருக்கும். ஒருநாள் பெரிய பூனை, குட்டிக்கிட்ட போய் நைச்சியமா பேசுச்சு. ரெண்டு பேரும் மெயின் ரோட்டில் போய் வேகமா போற வண்டிகளை வேடிக்கை பார்க்கலாம்னு சொல்லிச்சு.

குட்டிப்பூனையும் அதோட கள்ளத்தனம் தெரியாம சரின்னு கூட போச்சு. வண்டிக வேக வேகமா வந்துகிட்டு இருக்கு. சட்டுன்னு குட்டிப்பூனையை தூக்குன பெரிய பூனை, வேகமாக வந்துக்கிட்டு இருந்த ஒரு காருக்கு முன்னாடி தூக்கி போட்ருச்சு... கிரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் ந்னு சத்தம்... அப்புறம் என்னாச்சு... அதை கடைசில் காட்றேன்.. அதுக்கு முன்னால என்னை கொஞ்சம் பினாத்த விடுங்க... ;)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்த இரண்டு ஆண்டுகள் இங்கு வேலையை தொடர்வதற்கான ஒப்பந்ததை புதுப்பிக்க சொல்லியாகி விட்டது. மொத்தமாக இந்தியா வரும் முயற்சி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக உடல் பரிசோதனை முக்கியம். இரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே கட்டாயம்.

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது, இரத்தம் கொடுத்த பிறகு எக்ஸ்ரே எடுக்கும் இடத்திற்கு சென்ற போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள ரேடியோகிராபர் ஒரு பெண். கண்களை மட்டும் தெரியும் வண்ணம் பர்தா அணிந்து இருந்தார். எனது கோப்பை அவரிடம் கொடுத்து விட்டு, எக்ஸ்ரே இயந்திரத்தின் முன், எக்ஸ்ரே எடுக்கும் முறைப்படி நின்று கொண்டேன். சில வினாடிகளில் எக்ஸ்ரே முடிந்தது.

எக்ஸ்ரே எடுத்த அந்த பெண் அரபியில் கூறினார் “எந்த சிரமமுல்லாமல் நான் எக்ஸ்ரே எடுப்பது இதுதான் முதல் முறை. நன்றி!”. அவருக்கு சிரிப்பை பதிலாக உதிர்த்து விட்டு திரும்பினேன். பாவம் இது போன்ற ரேடியாலஜி வேலை செய்பவர்கள்.

துபாயில் இருந்த போது ஷார்ஜா Preventive Medicine Dept.. ல் வேலை செய்தேன். அங்கு தான் ஷார்ஜா விசாவில் வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளைச் சேர்ந்தவர்களும் வரக்கூடிய இடமாக இருக்கும். அங்குள்ள ரேடியாலஜி பகுதியில் ஒரு மராட்டி பெண் இருந்தார். (श्रध्दा - shradhdha - தமிழில் எழுத வரவில்லை). அங்கு மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களை எக்ஸ்ரே இயந்திரத்தின் முன் நிறுத்தி கையை பின்னால் கட்ட மடக்கி, நெஞ்சை நிமிர்த்தி, மூச்சை இழுத்துப் பிடிக்கச் சொல்வதற்குள் நொந்து நூலாகி விடுவார்.

இதைப் பார்க்கும் போது சில நேரங்களில் சிரிப்பாகவும், பல நேரங்களில் பாவமாகவும் இருக்கும். அங்கு இருந்து பார்த்து பழக்கமானதால் எக்ஸ்ரே எடுக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பழக்கமாகி விட்டது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எனது பதிவில் ஹிட்ஸ் கவுண்டர் வைத்துள்ளேன். பதிவை போன வருடமே ஆரம்பித்து எழுதி வந்தாலும் ஏபரலில் ஹிட்ஸ் கவுண்டர் போட்டதாகவே நினைவு. ஹிட்ஸைப் பார்த்து, அவ்வப்போது நமது உறவுக்காரப் பதிவர்கள் வந்தார்களா என பார்த்துக் கொள்வேன். சாதாரணமாக பதிவு போடும் நாளில் 200 முதல் 300 ஹிட்ஸூல் இல்லையென்றால் 100 முதல் 150 வரை இருக்கும். தனி வருகை 200 க்குள் தான் இருக்கும். சமீபத்தில் கார்த்திகாவின் பெயரைப் போட்டு பதிவு போட்டேன். மக்கள் டீவி கார்த்திகாத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று. அன்று கிட்டத்தட்ட 700 ஹிட்ஸ். 550 க்கும் மேல் தனி ஹிட்ஸ்.

என்னப்பா இது நியாயம்? நல்ல பதிவு எழுதும் போதெல்லாம் காணாம போய்டுறீங்களே... ;))




&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சமீபத்தில் நண்பர் ஒருவர் பிறந்தநாளை குறித்து வைத்துக் கொண்டு, நினைவுப்படுத்தும் வகையிலும், நண்பர்களின் பிறந்தநாட்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் வகையிலும் இருக்கும் ஒரு இணைய தளத்தில் இருந்து நமக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

அங்கு சென்று பதிந்தத போது, எனது நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க அங்கேயே இருந்து வசதி இருப்பதாக வந்தது. அங்கு நமது கூகுள் மெயில் ஐடி, மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்தால் அவர்களே நமது நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பார்களாம். பின்னர் தான் புரிந்தது. இதே முறையில் தான் எனக்கும் அழைப்பு வந்துள்ளது என்று.

இது போன்ற Unknown Server களில் நமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அங்கு நமது பாஸ்வேர்டையும் கொடுப்பது சரியானதாக தெரியவில்லை. ஏனெனில் இது போன்ற இணைய தளங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நமது மின்னஞ்சலின் பாஸ்வேர்ட்டைத் தருவதன் மூலம் அங்குள்ளவர்கள் நமது மின்னஞ்சலை தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகலாம். எச்சரிக்கை கவனத்துடன் இருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பெரிய பூனைக்கு என்ன ஆச்சி? விதி வலியது என்று சொல்வார்கள். கோட்டை கொத்தளங்களுக்குள் சென்று மறைந்து கொண்டாலும், நடப்பது நடந்தே தீருமாம். இதை சிம்பிளாக விளக்கும் இந்த GIF படத்தைப் பாருங்க... இதுதான் சொந்த செலவுல சூடு என்பதா... :))




படம் நன்றி : பிகேபியின் வலைப்பக்கம்

நீதிக்கான குறள் :
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. 208

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. 208

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். 207
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும். 207

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும். 319

குறள் உதவி : கயல்விழி முத்துலக்ஷ்மி அக்கா, மற்றும் துளசி டீச்சர்.

இதே போல்(?) குறளை வைத்து கதை சொல்பவர்கள் சொல்லலாம். என்னை அழைத்த ஜீவ்ஸுக்கு நன்றி!

Wednesday, October 15, 2008

சினிமா - எனக்கு பிடிக்காத வார்த்தையா போச்சுப்பா

நாகார்ஜூனன் ஆரம்பித்து வைத்த இந்த சினிமா பற்றிய தொடர் விளையாட்டு ஆயில்யன் வழியாக நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. இனி கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். நல்லா இருந்தா மதிப்பெண்களைத் தாராளமாக போடுங்க... இல்லைன்னா திட்டி விட்டாவது போங்க..... ;)

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

4, 5 வயதில் பார்த்த இளமைக் காலங்கள் இன்னும் நினைவில் உள்ளது. எங்கள் ஊருக்கு வெளியே மலை மேல் ஒரு தர்கா இருக்கும். அங்கு ஏதோ விசேசம் என்று எனது பாட்டி, அத்தையுடன் சென்று திரும்பினோம். வரும் வழியில் ஒரு திரையிரங்கில் இளமைக்காலங்கள் படம் பார்த்தோம். அப்போதெல்லாம் அது நினைவில் இல்லை. ஆனால் ஈரமான ரோஜாவே பாடலில் வரும் குழந்தையும், அந்த ரோஜாப்பூ போட்ட சட்டையும் பல ஆண்டுகள் நினைவில் இருந்தது. சமீபத்தில் இளமைக் காலங்கள் பாடல் பார்த்த போது தெளிவாகி விட்டது.

நினைவு தெரிந்து பார்த்த படம் மிஸ்டர் பாரத்! வத்தலகுண்டு கோவிந்தசாமி தியேட்டரில் அத்தை, மாமாவுடன் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. நடிகர்கள் திரைக்குப் பின்னால் இருந்து நடிப்பார்கள் என்று நினைத்தேன்.
2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

1998 செப்டம்பர் இரண்டாம் வாரம் ‘உதவிக்கு வரலாமா?’ என்ற கார்த்திக் நடத்த படம். அதிலும் பாதியில் எழுந்து வந்து விட்டேன். 1998 க்குப் பிறகு துபாய், சார்ஜாவில் இருந்த போது துபாய் சினிமா, தேரா சினிமா, நாசர், மற்றும் சார்ஜா கான்கோர்ட், ஹம்ரா போன்ற திரையரங்கிற்கு அருகில் எல்லாம் வேலை செய்த போதும் சினிமா பார்க்கும் ஆசை வரவில்லை.

திருமணத்திற்கு பின் தங்கமணியுடன் பார்த்த முதல் படம் என்ற காலத்தில் Nil தான் இருக்கும். இனியும் திரையரங்கிற்கு சென்று சினிமா விருப்பம் எனக்கோ, தங்கமணிக்கோ வரவில்லை.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக தசாவதாரத்திற்குப் பிறகு சுப்ரமணியபுரம் இணையத்தில் பதிவிறக்கிப் பார்த்தேன். வித்தியாசமான களத்தில் நமது பழைய வாழ்க்கையைக் காட்டிய விதம் ஈர்ப்பை ஏற்படுத்தியது. சைட் அடித்துக் கொண்டே போய், சாக்கடையில் கவிழ்ந்த கதை நமக்கு உண்டு என்பதால் அந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கம் கலந்த சிரிப்பு வரும்.

குசேலன், சரோஜா போன்ற படங்களை பதிவிறக்கிப் பார்க்க வசதி இருந்தும் இதுவரைப் பார்க்கவில்லை.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

கடந்த பத்து வருடமாக விரும்பி படம் பார்க்காததால் அதன் தாக்கம் இல்லை. ஆனாலும் சில பாதித்த படங்களை சுட்ட இயலும். அதில் முதலிடம் வகிப்பது சத்ரிய வம்சம் என்ற மம்முட்டி படம். பாசத்திற்கும், பழி வாங்கும் வெறிக்கும் இடையேயான போராட்டம் தான் கதை. உருகிப் போய் பார்த்தேன். ஆனால் இது ஒரு மொழி மாற்றுப் படம் என்பதால் தமிழ்ச்சினிமா என்ற வகையில் வருமா என்று தெரியவில்லை.
முதல் மரியாதையின் ஒவ்வொரு பிரேமும் ரசித்து பார்த்து உருகுப் போனேன். பாரதிராஜாவின் திறமைக்கு சான்று அது. மற்றபடி காதல் ஓவியம், காதலுக்கு மரியாதை, சேது, தில்லானா மோகனாம்பாள், மூன்றாம் பிறை போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியவை.

பாலச்சந்தர், ஸ்ரீதர் வகைப் படங்கள் என் காலத்தில் முடிந்து போய் இருந்ததால் அவைகளைப் பார்த்த போது ஈர்ப்பு ஏற்படவில்லை.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நம்மை தாக்கும் அளவுக்கு எந்த சம்பவமும் நடந்ததாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் ரஜினியின் அரசியல் ஸ்டண்ட்களால் நொந்து நூலாகிப் போனது என்னவோ உண்மை தான்.. :( (தலை.. இன்னைக்கு வரை நொந்து போகத்தான் வைக்கிறார் என்பது கசக்கும் உண்மை)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

இதைத் தொழில்நுடபம் என்று கூற இயலுமா என்று தெரியவில்லை. முகபாவத்தைக் கொண்டு, காட்சியை விளக்கும் திறமை. இது மற்ற மொழிகளில் குறைவு என்றே சொல்வேன். வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் விரக தாபத்தை ஒரு பாடலில் (அழகு மலராட) காட்டி இருப்பார் இயக்குநர் ஆர்.சுந்தரராஜன். வேறு எங்கும் இவ்வளவு கண்ணியமாக இதைக் காட்டியதாக பார்க்கவில்லை. (இன்று அதே காட்சி கிடைத்தால் கிடைச்சதுடா சான்ஸ்! என்று முக்கல்,முனகலுடன் ஒரு பாடல் இருக்கும் என்பது உண்மை)

அபூர்வ சகோதரர்களின் கமலில் குள்ள அப்பு மாயை. இன்னும் உடையாத வித்தியாசமான முயற்சி!


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஹிஹிஹி.. கிசுகிசுக்களை விடாமல் வாசிக்கும் வழக்கமுண்டு. வாரமலர், குமுதம், ஆன்ந்த விகடன் போன்றவற்றில் வரும் சினிமா துணுக்குகளைப் படிப்பேன். இப்போது இணையத்தில் கிசுகிசுக்களைப் படிப்பதில்லை. ஆனால் திரைவிமர்சனங்களைப் படிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

7. தமிழ்ச்சினிமா இசை?

இசையில் அவ்வளவாக ஆர்வமில்லையென்றாலும். இசையில்லாத, அல்லது குரலுக்கு அதிக முக்கியத்துவமுள்ள பாடல்களைக் கேட்பேன். இளையராஜா பாடல்கள் தான் அதிகம் விருப்பமுள்ளவை. அறையில், வீட்டில் பாடல்களைக் கேட்கும் வழக்கம் இல்லை. வேலை செய்யும் இடத்தில் அல்லது தனிமை வாட்டும் நேரங்களில் செல் போனில் இருக்கும் சில பாடல்களைக் கேட்பேன். அதுவும் குறிப்பிட்ட சில பாடல்கள் தான் பேவரை லிஸ்ட்டில் இருக்கும். (சமீபத்தில் பேவரைட் லிஸ்ட்டில் சேர்ந்த பாடல்)
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மொழியே தேவைப்படாத பல மொழிப்படங்களையும் வளைத்து, வளைத்து பார்த்த காலம் உண்டு. பிற மொழிப்படங்கள் என்றால் அதில் இந்தி. மலையாளம் முக்கியத்துவம் வகிப்பவை. இந்தி படங்களில் ஷோலே, மதர் இந்தியா தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல் மலையாளத்தில் மோகன்லால் படங்களை விரும்பிப் பார்ப்பேன். Life is Beautiful என்ற படம் ரசித்து பார்த்தது.
நல்லவேளை இந்த படத்தை ரீமேக் செய்ய வாசுக்கள் இல்லை போல. தப்பித்தது.

ஆங்கிலப்படங்கள் பார்க்கும் வழக்கம் இருந்தால் அதிகம் தாக்கிய படம் டைட்டானிக் தான். சென்னையில் படித்துக் கொண்டு இருந்த போது, கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு வகுப்பில் இருந்த 30 மாணவர்களில் 17 பேர் AVM ராஜேஸ்வரியில் முன்பதிவு செய்து கலக்கலாக பார்த்தோம். மறுநாள் எங்கள் பிரின்சிபால் தாக்கிய தாக்கில் நிலைகுழைந்து போய் விட்டோம். (வார்த்தையில் தான்... அடியெல்லாம் விழலை)

வியாழக் கிழமைகளில் ETV - Urdu வில் ஈரானியப் படங்களை விரும்பிப் பார்ப்பேன். இப்போது வேலை நேர மாற்றத்தால் முடிவதில்லை. என்னை மிகமிக பாதித்த படம் Children of Heaven. அந்த திரைப்படம் முழுவதும் எடுத்து போட்டு, ஒரு இடுகையே இட்டுள்ளேன். விரும்பியவர்கள் பார்க்கலாம். http://majinnah.blogspot.com/2008/02/video-children-of-heaven-full-movie.html

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

பத்து வருடமாக திரையரங்கிற்கே செல்லாமல் இருப்பது தான் சாதனை. நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. தொடர்பு ஏற்படும் வாய்ப்பு கிடைத்தாலும் நிராகரிப்பேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாகார்ஜூனன் ஸ்டைலிலேயே அடுத்த கேள்விக்கு தாவுங்கள்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மிகவும் மகிழ்ச்சியடைவேன். லாட்டரி தொழிலாளர்கள் வேறு தொழில்களில் போய் செட்டில் ஆனது போல், சினிமா தொழிலாளர்களும் வேறு வேறு வேலைகளில் போய் விட்டால் மிகவும் மகிழ்வேன். அதோடு மெகா சீரியல்களுக்கும் மொத்தமாக தடை போட்டு விட்டால் தமிழர்கள் மாயையான வாழ்க்கையில் இருந்து விடுபடுவார்கள்.

வாசுக்களும் பேரரசுக்களும், நமீதா, திரிஷாக்களெல்லாம் ஒழிந்து போய் புது சினிமா உலகம் பிறக்க வேண்டும். ஹீரோயிஷம், மார்க்கெட் சண்டை, தங்கை, அம்மா செண்டிமெண்ட், குலுக்கு டான்ஸ், உடல் அரசியல் இல்லாத புதிய பரிணாமத்தில், சமூகத்தோடு இயைந்த, சமூக அவலங்களைக் காட்டக் கூடிய படங்கள் வரத்துவங்கினால் மகிழ்வேன்.

டிஸ்கி : தங்கமணிக்கு சினிமா, சீரியல்கள், பாடல்கள் பார்க்கும் வழக்கம் இல்லை. ஊரில் இருந்தால் ஒளிந்து, ஒளிந்து தான் ஏதாவது சினிமா தொலைக்காட்சியில் பார்ப்பேன்.. ;)) கிரிக்கெட், செய்தி, டாக்குமெண்ட்ரிகள் மட்டுமே பார்க்க அனுமதி இருக்கு.

இந்த தொடர் விளையாட்டைத் தொடர நான் அழைப்பவர்கள்
(விருப்பமும், நேரமும் இருந்தால் மட்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. கண்டிப்பா எழுதியே ஆகனும்.. ஆமா சொல்லிப்புட்டோம்)

1. பாசக்கார தங்கச்சி அம்மு @ மது...
2. அன்பான அக்கா ராமலக்ஷ்மி
3. பிரியமுள்ள அண்ணன் பாரதி
4. சினிமா சுரங்கம் கானா பிரபா அண்ணன்
5. அன்பு சகோதரர் தமிழன்....
6. சுடர் என்னும் கொஞ்ச நல்ல அன்புத்தம்பி